மாவட்ட செய்திகள்

தனியார் நிறுவனங்களில் கன்னடர்களுக்கு இடஒதுக்கீடு கோரி கர்நாடகத்தில் நாளை முழு அடைப்பு கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு அழைப்பு + "||" + Full shutdown tomorrow in Karnataka

தனியார் நிறுவனங்களில் கன்னடர்களுக்கு இடஒதுக்கீடு கோரி கர்நாடகத்தில் நாளை முழு அடைப்பு கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு அழைப்பு

தனியார் நிறுவனங்களில் கன்னடர்களுக்கு இடஒதுக்கீடு கோரி  கர்நாடகத்தில் நாளை முழு அடைப்பு  கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு அழைப்பு
தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பில் கன்னடர்களுக்கு இடஒதுக்கீடு கோரி கர்நாடகத்தில் நாளை (வியாழக்கிழமை) முழு அடைப்புக்கு கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு அழைப்பு விடுத்து உள்ளது.
பெங்களூரு, 

கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் எச்.பி.நாகேஷ் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கர்நாடகத்தில் தனியார் நிறுவனங்களில் கன்னடர்களுக்கு வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று சரோஜினி மகிஷி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டது. கர்நாடக அரசு இதுவரை தனியார் நிறுவன வேலை வாய்ப்பில் கன்னடர்களுக்கு இட ஒதுக்கீடு பெற்றுத்தரவில்லை.

அரசு செவிசாய்க்கவில்லை

சரோஜினி மகிஷி அறிக்கையை அமல்படுத்த கோரி நாங்கள் கடந்த 100 நாட்களாக தொடர்ந்து பல்வேறு வகையில் போராட்டம் நடத்தி வருகிறோம். எங்களின் கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்கவில்லை. இதையடுத்து அரசின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் வருகிற 13-ந் தேதி (அதாவது நாளை) கர்நாடகத்தில் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளோம்.

இந்த முழு அடைப்புக்கு 700-க்கும் மேற்பட்ட சங்கங்கள் ஆதரவு வழங்கியுள்ளன. நாங்கள் அமைதி வழியில் இந்த போராட்டத்தை நடத்துகிறோம். நாளை பெங்களூருவில், டவுன் ஹாலில் இருந்து சுதந்திர பூங்கா வரை ஊர்வலம் நடக்கிறது. இதில் 30 ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம். 40-க்கும் மேற்பட்ட மடாதிபதிகள் பங்கேற்க உள்ளனர்.

வாபஸ் பெறுவோம்

ஒருவேளை மாநில அரசு முன்வந்து, சரோஜினி மகிஷி அறிக்கையை அமல்படுத்துவதாக உறுதியளித்தால் நாங்கள் முழு அடைப்பு போராட்டத்தை வாபஸ் பெறுவோம். பொதுமக்களுக்கு எந்த தொந்தரவும் கொடுக்க மாட்டோம். கன்னட திரைத்துறையை சேர்ந்த பல்வேறு நடிகர்-நடிகைகள் ஆதரவு வழங்குவதாக உறுதியளித்துள்ளனர்.

இவ்வாறு எச்.பி.நாகேஷ் கூறினார்.