மாவட்ட செய்திகள்

தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் தேர் திருவிழாவில் இருதரப்பினர் மோதல் கல்வீச்சில் 7 பேர் காயம்; போலீஸ் தடியடி + "||" + Tharamangalam The Kailasanathar Temple At the Chariot Festival Fight

தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் தேர் திருவிழாவில் இருதரப்பினர் மோதல் கல்வீச்சில் 7 பேர் காயம்; போலீஸ் தடியடி

தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் தேர் திருவிழாவில் இருதரப்பினர் மோதல் கல்வீச்சில் 7 பேர் காயம்; போலீஸ் தடியடி
தாரமங்கலம் கைலாச நாதர் கோவில் தேரோட்ட விழாவில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதையொட்டி நடந்த கல்வீச்சில் 7 பேர் காயம் அடைந்தனர். மோதலில் ஈடுபட்டவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். கல்வீச்சு சம்பவத்தை கண்டித்து நேற்று கடைகள் அடைக்கப்பட்டன.
தாரமங்கலம்,

சேலம் மாவட்டம், தாரமங்கலத்தில் பிரசித்தி பெற்ற கைலாசநாதர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் தைப்பூசத்தையொட்டி தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டு தைப்பூசமான கடந்த 8-ந் தேதி தேரோட்டம் தொடங்கியது. தேர் நிலையில் இருந்து புறப்பட்டு 4 ரத வீதிகள் வழியாக இழுத்து வரப்பட்டு நேற்று முன்தினம் தேர் நிலைக்கு வந்து சேர்ந்தது. தேரோட்டம் நடந்த 3 நாட்களும் தாரமங்கலம் விழாக்கோலம் பூண்டிருந்தது.


நேற்று முன்தினம் மாலையில் தேர் நிலை சேர்ந்ததும், சன்னதி வீதியில் ஒரு தரப்பினர் சார்பில் இன்னிசை கச்சேரி நடைபெற்றது. அதே நேரத்தில் தேரை வடம்பிடித்து இழுத்து வந்தவர்கள், தேர் நிலையை சுற்றி வந்தனர்.

அவர்கள் வரும்வழியில் இன்னிசை கச்சேரி நடத்தியவர்கள் ஆட்டம், பாட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் தேரை இழுத்து வந்தவர்களுக்கும், அங்கிருந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் லோகேஷ் (வயது 22) என்பவர் ஒரு தரப்பினரால் தாக்கப்பட்டார். அவர் இது குறித்து தாரமங்கலத்தில் உள்ள தனது தரப்பை சேர்ந்த ரவி என்பவரிடம் தகவல் கூறினார். இதையடுத்து அவருக்கு ஆதரவாக நூற்றுக்கணக்கான வாலிபர்கள் தேர் நிலை நிறுத்தப்பட்ட பகுதிக்கு வந்தனர்.

அப்போது தேரில் இருந்து கைலாசநாதர், சிவகாமி சுந்தரி உற்சவ சிலைகள் கோவிலுக்குள் கொண்டு செல்ல தயாராக இருந்தது. அப்போது அங்கு ரவி தலைமையில் வந்தவர்கள், லோகேசை தாக்கியவரை கைது செய்யும் வரை, தேரில் இருந்து சாமிகளை கோவிலுக்குள் எடுத்து செல்ல அனுமதிக்க மாட்டோம் என்று கூறினர். இதனிடையே மற்றொரு தரப்பை சேர்ந்தவர்களும் அங்கு கூடிவிட்டனர். இதனால் அங்கு மோதல் ஏற்படும் பதற்றமான சூழல் நிலவியது.

இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஓமலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கர் மற்றும் போலீசார், இருதரப்பினரையும் சமாதானம் செய்து சாமிகளை கோவிலுக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்தனர். தேரில் இருந்து சாமி சிலைகள் கோவிலுக்குள் கொண்டு செல்லப்பட்டது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் மீண்டும் அந்த இருதரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது. இதையடுத்து இருதரப்பினரும், ஒருவர் மீது மற்றொருவர், கற்கள், கம்புகளை வீசி தாக்கி கொண்டனர்.

மேலும் சன்னதி தெரு, நங்கவள்ளி மெயின்ரோடு ஆகிய பகுதிகளில் கல்வீச்சில் ஈடுபட்டவர்கள் மின் விளக்குகளையும், அங்கு நிறுத்தப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிள்களையும் அடித்து நொறுக்கினர். அப்பகுதியில் ஒரு நகைக் கடையின் பெயர்பலகையும் அடித்து நொறுக்கப்பட்டது.

இதனால் அங்கு பதற்றம் அதிகரித்தது. உடனே அங்கு குவிக்கப்பட்டு இருந்த போலீசார் இருதரப்பினரையும் தடியடி நடத்தி கலைத்தனர்.

இருதரப்பினர் இடையேயானமோதலில், ஒரு தரப்பை சேர்ந்த வெங்கடேசன் (43), நடராஜன் (35), கண்ணன் (33) ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்றனர்.

அதே நேரத்தில், மற்றொரு தரப்பில் கோழிக்கட்டானூர் பகுதியை சேர்ந்த விக்னேஷ்(24), சிவராம கிருஷ்ணன்(25) ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் இருவரும் ஓமலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். மேலும் இந்த மோதலில் மதியழகன் (26), ரெங்கராஜ் (23) ஆகியோர் லேசான காயம் அடைந்தனர்.

இந்த கல்வீச்சு சம்பவத்தை கண்டித்து நேற்று காலையில் தாரமங்கலத்தில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று பொதுமக்கள் சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி தாரமங்கலத்தில் நேற்று அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் வீதிகள் வெறிச்சோடி காட்சி அளித்தன.

இந்த மோதல் சம்பவம் குறித்து தாரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், இருதரப்பை சேர்ந்த 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்தார்.

மேலும் இந்த மோதல் தொடர்பாக தாரமங்கலத்தை சேர்ந்த ரவி(50) உள்பட அவரது தரப்பை சேர்ந்த 13 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் மற்றொரு தரப்பை சேர்ந்த சின்ன காடம்பட்டியை சேர்ந்த சின்ராஜ் உள்பட 4 பேரையும் கைது செய்தனர்.

பின்னர் அவர்கள் அனைவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். அதே நேரத்தில் தலைமறைவானவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

இதனிடையே தாரமங்கலத்தில் மேலும் அசம்பாவிதம் எதுவும் ஏற்படாமல் இருக்க துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கர் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு ரோந்துப்பணி மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே வருவாய்த்துறையினர், போலீசார் இணைந்து விழாக்குழுவினர் மற்றும் தாரமங்கலம் பகுதி மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் ஓமலூர் தாலுகா அலுவலகத்தில் இந்த மோதல் சம்பவம் தொடர்பாக இருதரப்பினருடன், அதிகாரிகள், போலீசார் சமாதான கூட்டம் ஒன்றை இன்று( புதன்கிழமை) நடத்த முடிவு செய்யப்பட்டது. மேலும் நாளை (வியாழக்கிழமை) தெப்பத்திருவிழாவை நடத்துவது என்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.