ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்வதாக ரூ.14¼ லட்சம் மோசடி செய்த கணவன்- மனைவி கைது
ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்வதாக ரூ.14¼ லட்சம் மோசடி செய்த கணவன்-மனைவியை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை டவுன் வேட்டவலம் ரோடு பகுதியை சேர்ந்தவர் ஜெயந்தி. திருவண்ணாமலை தேனிமலை பகுதியை சேர்ந்தவர் மணிமேகலை. இவர்கள் இருவரும் திருவண்ணாமலையில் உள்ள ஒரு தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர். அப்போது இவர்களுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டது.
ஜெயந்தியின் கணவர் பவுன்குமார் அவரது வீட்டிலேயே தனியார் ஷேர் மார்க்கெட்டிங் நிறுவனத்தில் டீலர்சிப் எடுத்து நடத்தி வந்துள்ளார். ஜெயந்தியும், பவுன்குமாரும் சம்பவத்தன்று மணிமேகலையின் வீட்டிற்கு சென்றனர். அப்போது பவுன்குமார் மணிமேகலை மற்றும் அவரது கணவர் வேலுவிடம் தான் நடத்தி வரும் ஷேர்மார்க்கெட்டில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெற்றுத் தருவதாக கூறி உள்ளார்.
இதையடுத்து மணிமேகலை கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 17-ந் தேதி ரூ.1 லட்சத்தை ஜெயந்தியின் வங்கிக்கணக்கிற்கு அனுப்பி ஷேர்மார்க்கெட்டில் முதலீடு செய்துள்ளார். பின்னர் அவர்கள் மணிமேகலை முதலீடு செய்த பணத்திற்கு கூடுதலாக ரூ.10 ஆயிரம் வந்துள்ளதாக தெரிவித்து ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்தை மணிமேகலையின் வங்கி கணக்கிற்கு அனுப்பினர். தொடர்ந்து அவர்கள் மணிமேகலை மற்றும் அவரது குடும்பத்தினரிடம் ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்யுமாறு கேட்டுள்ளார்.
இதையடுத்து மணிமேகலை ரூ.1½ லட்சமும், மணிமேகலையின் கணவர் வேலு ரூ.1½ லட்சமும், மணிமேகலையின் தாய் மீனா ரூ.3 லட்சமும், தம்பிகள் அருண்குமார் ரூ.1½ லட்சமும், மணிகண்டன் ரூ.2 லட்சமும், வேங்கிக்காலை சேர்ந்த தமிழ்ச்செல்வன் ரூ.2¾ லட்சமும், வேங்கிக்காலை சேர்ந்த பார்வதி ரூ.2 லட்சமும் என மொத்தம் ரூ. 14¼ லட்சத்தை ஜெயந்தியிடம் கொடுத்துள்ளார்கள்.
பின்னர் ஜெயந்தியும், அவரது கணவர் பவுன்குமாரும் ரூ.14¼ லட்சத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றி உள்ளார்கள். பணத்தை திருப்பி கொடுக்க அவர்கள் கால தாமதம் செய்து வந்ததால் இதுகுறித்து மணிமேகலை திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்தார்.
இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்ரவர்த்தி உத்தரவின்பேரில் திருவண்ணாமலை மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு குமார் மேற்பார்வையில் திருவண்ணாமலை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் ஜெயந்தியும், பவுன்குமாரும் பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைந்தனர்.
Related Tags :
Next Story