வி‌‌ஷம் கலந்த அரிசியை தின்ற அண்ணன்-தம்பி உள்பட 3 சிறுவர்களுக்கு தீவிர சிகிச்சை


வி‌‌ஷம் கலந்த அரிசியை தின்ற அண்ணன்-தம்பி உள்பட 3 சிறுவர்களுக்கு தீவிர சிகிச்சை
x
தினத்தந்தி 11 Feb 2020 10:35 PM GMT (Updated: 11 Feb 2020 10:35 PM GMT)

கோட்டூர் அருகே வி‌‌ஷம் கலந்த அரிசியை தின்ற அண்ணன்-தம்பி உள்பட 3 சிறுவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கோட்டூர்,

திருவாரூர் மாவட்டம், கோட்டூர் அருகே குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் விஸ்வநாதன். இவருடைய மகன்கள் கிஷோர் (வயது 8). இவர் 3-ம் வகுப்பும், ஜஸ்வின் (6) 2-ம் வகுப்பும், அதே பகுதியை சேர்ந்த செந்தில்குமார் என்பவரின் மகன் குமரராஜ் (6) 1-ம் வகுப்பும் அதே கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்த அவர்கள், அருகில் உள்ள பாசமலர் என்பவர் வேலைக்கு சென்றுவிட்டதால், அவரது வீட்டில் விளையாடி உள்ளனர். பின்னர் அவர்கள் 3 பேரும் அங்கிருந்த அரிசியை தின்றுள்ளனர். வேலை முடிந்து வீடு திரும்பிய பாசமலர் வீட்டில் இருந்த பாத்திரங்கள் களைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து, விசாரித்ததில் எலிகளை பிடிக்க எலி மருந்து (வி‌‌ஷம்) கலந்து வைத்திருந்த அரிசியை சிறுவர்கள் 3 பேரும் தின்றது தெரியவந்தது.

இதனை அறிந்த சிறுவர்களின் பெற்றோர், அவர்கள் 3 பேரையும் சிகிச்சைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அவர்கள் 3 பேரும் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து பெருகவாழ்ந்தான் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story