3 சக்கர ஸ்கூட்டர் கேட்டு கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயற்சி


3 சக்கர ஸ்கூட்டர் கேட்டு கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயற்சி
x
தினத்தந்தி 12 Feb 2020 10:30 PM GMT (Updated: 12 Feb 2020 1:36 PM GMT)

3 சக்கர ஸ்கூட்டர் கேட்டு, கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவில்பட்டி, 

3 சக்கர ஸ்கூட்டர் கேட்டு, கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மாற்றுத்திறனாளி 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வ.உ.சி. நகர் 2–வது தெருவைச் சேர்ந்தவர் பத்ம சங்கர் (வயது 44). கால் நடக்க முடியாத மாற்றுத்திறனாளி. இவருடைய மனைவி முத்துலட்சுமி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

பத்ம சங்கர் தனக்கு 3 சக்கர ஸ்கூட்டர் வழங்கக்கோரி, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு வழங்கினார். ஆனால் அவருக்கு 3 சக்கர ஸ்கூட்டர் வழங்கப்படவில்லை.

தீக்குளிக்க முயற்சி 

இதனால் மனமுடைந்த பத்ம சங்கர் நேற்று காலையில் கோவில்பட்டி தாலுகா அலுவலக வளாகத்தில் சென்று, திடீரென்று தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த கோவில்பட்டி கிழக்கு போலீசார் மற்றும் தாலுகா அலுவலக ஊழியர்கள் விரைந்து சென்று, பத்ம சங்கரிடம் இருந்த மண்எண்ணெய் பாட்டிலை பிடுங்கி, அவர் மீது தண்ணீரை ஊற்றினர்.

3 சக்கர ஸ்கூட்டர் கேட்டு... 

அப்போது பத்மசங்கர் கதறி அழுதவாறு கூறுகையில், கூலி தொழிலாளியான தனக்கு 21 வயதில் மூளை காய்ச்சல் ஏற்பட்டதால், கால்கள் நடக்க இயலவில்லை. இதனால் பிறரின் உதவியின்றி எங்கும் செல்ல முடியவில்லை. இதனால் என்னுடைய மனைவி கூலி வேலை செய்து, குடும்பத்தினை நடத்தி வருகிறார். வாடகை வீட்டில் வசித்து வரும் தங்களால் வாடகை கொடுக்க இயலவில்லை.

எனக்கு 3 சக்கர ஸ்கூட்டர் இருந்தால், பல்வேறு இடங்களுக்கு சென்று, ஏதேனும் கூலி வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றுவேன். எனவே 3 சக்கர ஸ்கூட்டர் கேட்டு, கடந்த 2018–ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு வழங்கினேன். ஆனால் இன்னும் 3 சக்கர ஸ்கூட்டர் வழங்கப்படவில்லை என்று கூறினார்.

தாசில்தார் பேச்சுவார்த்தை 

இதையடுத்து பத்ம சங்கரிடம் தாசில்தார் மணிகண்டன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், பத்ம சங்கருக்கு 3 சக்கர ஸ்கூட்டர் வழங்கவும், இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பசுமை வீடு வழங்கவும் ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தார். இதையடுத்து பத்ம சங்கரை ஆட்டோவில் ஏற்றி, அவரது வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் 3 சக்கர ஸ்கூட்டர் கேட்டு, மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story