பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் குடல், இரைப்பையில் நவீன சிகிச்சை
பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் 4 பேருக்கு குடல் மற்றும் இரைப்பையில் நவீன எண்டோஸ்கோபி சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது.
நெல்லை,
பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் 4 பேருக்கு குடல் மற்றும் இரைப்பையில் நவீன எண்டோஸ்கோபி சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது.
பாளையங்கோட்டை ஐகிரவுண்டில் அரசு பல்நோக்கு உயர் சிகிச்சை ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு 4 பேருக்கு நவீன எண்டோஸ்கோபி சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து ஆஸ்பத்திரி டீன் ரவிச்சந்திரன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
12 வயது சிறுமி
நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் புதிதாக பல்நோக்கு உயர் ஆஸ்பத்திரி தொடங்கப்பட்டு உள்ளது. இங்கு குடல், இரைப்பை மருத்துவபிரிவில் தமிழகத்தில் முதன்முறையாக எண்டோஸ்கோபி என்ற கருவி மூலம் டாக்டர் கந்தசாமி என்ற குமார் மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து சாதனை படைத்துள்ளனர்.
நெல்லை மேலப்பாளையத்தை சேர்ந்த 12 வயது சிறுமிக்கு பரம்பரை வியாதியான சிறுகுடல் மீட்சி இருந்தது. அந்த சிறுமிக்கு அறுவை சிகிச்சை, மயக்க மருந்து எதுவும் இன்றி சிறுகுடலில் இருந்த ‘பாலிப்’ கட்டி நீக்கப்பட்டது.
இதே போல் விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்தவர் உணவுக்குழாய் புற்றுநோயால் சாப்பாட்டை விழுங்க முடியாமல் அவதிப்பட்டார். அவருக்கு எண்டோஸ்கோபி மூலம் வயிற்றில் துறையிட்டு ‘பெக் குழாய்’ பொருத்தப்பட்டு இதன் மூலம் உணவு வழங்கப்படுகிறது. தனியார் ஆஸ்பத்திரியில் கூட அளிக்க முடியாத இந்த சிகிச்சையை இங்கு செய்யப்பட்டு உள்ளது.
பாளையங்கோட்டையை சேர்ந்த ரஹீம் (வயது 55) என்பவருக்கு பித்தப்பை குழாய் அடைப்பால் மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டு. அவருக்கு கல் நீக்கப்பட்டு, பிளாஸ்டிக் ஸ்டென்ட் பொருத்தப்பட்டு உள்ளது. ராஜபாளையத்தை சேர்ந்த அரிராம்சேட் (46) நீர் கட்டியால் அவதிப்பட்டார். அவருக்கு ‘சிஸ்டொகேஸ்ராஸ்டமி’ என்ற சிகிச்சையை அளித்து கட்டி முழுவதுமாக சரி செய்யப்பட்டு உள்ளது. குடல், இரைப்பை மருத்துவ பிரிவில் இந்த நவீன சிகிச்சைகள் தமிழகத்தில் முதன்முறையாக செய்யப்பட்டு உள்ளது. அனைத்து சிகிச்சைகளும் முதல்–அமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் இலவசமாக செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ் நோய் பாதிக்கப்பட்டு யாரும் வந்தால் பரிசோதனை செய்யவும், சிகிச்சை அளிக்கவும் 2 வார்டுகள் அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் இதுவரை இதுபோன்ற அறிகுறிகளுடன் வரவில்லை. அவ்வாறு யாருக்கும் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டால் உடனடியாக சிகிச்சை அளிக்க 24 மணி நேரமும் மருத்துவ குழு தயார் நிலையில் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது குடல், இரைப்பை மருத்துவ பிரிவு துணைத்தலைவர் கந்தசாமி என்ற குமார், துணை பேராசிரியர் பாப்பி ரிஜாய்ஸ், உதவி பேராசிரியர் ஷபிக் மற்றும் மருத்துவ கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன், துணை மருத்துவ கண்காணிப்பாளர் ரேவதி பாலன் ஆகியோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story