தைப்பூச திருவிழா முடிந்தும் பழனி முருகன் கோவிலுக்கு படையெடுக்கும் பக்தர்கள்
தைப்பூச திருவிழா முடிந்த நிலையில், பழனி முருகன் கோவிலுக்கு பக்தர்கள் படையெடுத்த வண்ணம் உள்ளனர். மலைக்கோவிலில் 3 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
பழனி,
பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழா கடந்த 2-ந்தேதி பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாகவும், காவடி எடுத்தும் பழனிக்கு வந்தனர்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான திருக்கல்யாணம், தேரோட்டம், 7, 8-ந்தேதிகளில் நடைபெற்றது. அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் பழனி நகரமே ஸ்தம்பித்தது. தைப்பூச திருவிழா நேற்று முன்தினம் தெப்பத்தேர் உற்சவத்துடன் நிறைவு பெற்றது. அந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
தைப்பூச திருவிழா நிறைவு பெற்றாலும் பழனி முருகன் கோவிலுக்கு பக்தர்கள் படையெடுத்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக உடுமலை, பொள்ளாச்சி, தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்தனர். பக்தர்களின் வருகையால் சாமிநாதபுரம், வயலூர், மானூர் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அவ்வப்போது ஏற்பட்டு வருகிறது.
இதையடுத்து அங்கு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று அதிகாலை முதலே பழனிக்கு பக்தர்கள் வருகை அதிகரித்து காணப்பட்டது. இதனால் சன்னதி வீதி, கிரிவீதிகள், பூங்காரோடு ஆகிய இடங்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது. காவடி எடுத்து வந்த பக்தர்கள் படிப்பாதை வழியே மலைக்கோவிலுக்கு சென்றனர்.
இதேபோல் ரோப்கார், மின்இழுவை ரெயில் நிலையங்களிலும் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. இதற்கிடையே காற்று பலமாக வீசியதால் ரோப்கார் சேவையும் அடிக்கடி நிறுத்தப்பட்டது. இதனால் அங்கு பக்தர்கள் வெகுநேரம் காத்திருந்தனர். மலைக்கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
இதனால் பொது, கட்டண தரிசன வழிகளில் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். இதேபோல் வெளிப்பிரகாரத்திலும் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத நிலையில் காணப்பட்டது. இதன் காரணமாக நேற்று 3 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story