உழவர் கடன் அட்டை திட்டத்தின் பயன்களை விவசாயிகள் தெரிந்து கொள்ள சிறப்பு முகாம்கள் 24-ந்தேதி வரை நடக்கிறது


உழவர் கடன் அட்டை திட்டத்தின் பயன்களை விவசாயிகள் தெரிந்து கொள்ள சிறப்பு முகாம்கள் 24-ந்தேதி வரை நடக்கிறது
x
தினத்தந்தி 12 Feb 2020 10:30 PM GMT (Updated: 12 Feb 2020 5:15 PM GMT)

உழவர் கடன் அட்டை திட்டத்தின் பயன்களை விவசாயிகள் தெரிந்து கொள்வதற்கான சிறப்பு முகாம்கள் வருகிற 24-ந் தேதி வரை நடக்கிறது என்று கலெக்டர் பொன்னையா தெரிவித்தார்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நமது இந்திய அரசாங்கம் பிரதம மந்திரியின் கவுரவ நிதி உதவி திட்டத்தின் கீழ் பயன்பெறும் அனைத்து விவசாயிகளுக்கும் உழவர் கடன் அட்டை திட்டத்தின் பயன்கள் சென்றடைய திட்டமிட்டுள்ளது.

பிரதம மந்திரியின் கவுரவ நிதி உதவி திட்டத்தின் கீழ் நாட்டிலுள்ள அனைத்து தகுதியான விவசாயிகளுக்கு இடுபொருள் மற்றும் பிற தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதி உதவி அளித்து வருகிறது. மேற்கண்ட திட்டத்தில் பயன்பெற அனைத்து பயனாளிகளுக்கும் பிற நிதி தேவைகளை உடனுக்குடன் பூர்த்திசெய்யும் நோக்கில் உழவர் கடன் அட்டை திட்டத்தில் வங்கிகள் மூலம் கிஸான் கிரெடிட் கார்டுகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் பயன்களை விவசாயிகளுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் அனைத்து வங்கி கிளைகளிலும் வருகிற 24-ந்தேதி வரை சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் அந்தந்த பகுதியில் உள்ள வங்கி கிளையை தங்களுடைய ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் நில ஆவணங்களுடன் அணுகி பயன்பெறலாம். மேலும் கால்நடை வளர்ப்பு மற்றும் மீன் வளர்ப்புக்கும் உழவர் கடன் அட்டைகள் வழங்கப்படுகின்றன. எனவே பிரதம மந்திரியின் கவுரவ நிதி உதவி திட்டத்தின் கீழ் பயன்பெறும் உழவர் கடன் அட்டை திட்டத்தின்கீழ் பயன்பெற அனைத்து விவசாயிகளுக்கும் அந்தந்த பகுதிகளில் உள்ள வங்கி கிளையை அணுகி இந்த திட்டத்தில் பயன்பெறலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story