இளம்பெண்ணை குத்திக்கொன்ற வழக்கில், வாலிபருக்கு சாகும் வரை சிறை - கோவை கோர்ட்டு தீர்ப்பு
இளம்பெண்ணை குத்திக்கொன்ற வழக்கில் வாலிபருக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து கோவை கோர்ட்டு தீர்ப்பளித்தது.
கோவை,
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஜோதி நகர் நல்லிக் கவுண்டர் வீதியை சேர்ந்தவர் ராஜன். இவருடைய மகன் தங்கதுரை (வயது 32). இவர் அந்தப்பகுதியை சேர்ந்த சந்திரன் என்பவரின் மகள் சுப்பிரிகா (24) என்ற பெண்ணை ஒருதலையாக காதலித்து உள்ளார். அத்துடன் அவர் சுப்பிரிகாவை அடிக்கடி சந்தித்து தனது காதலை வெளிப்படுத்தி உள்ளார். ஆனால் அவர் தங்கதுரையின் காதலை ஏற்கவில்லை.
இதையடுத்து தங்கதுரை சுப்பிரிகாவின் வீட்டிற்கு சென்று பெண் கேட்டார். அதற்கு அவரின் பெற்றோர், தனது மூத்த மகள் காதலித்து திருமணம் செய்து கொண்டார். எனவே 2-வது மகளை சொந்தத்தில் திருமணம் செய்து கொடுக்க முடிவு செய்து இருக்கிறோம். எனவே நீ இனிமேல் சுப்பிரிகாவை தொந்தரவு செய்யக்கூடாது என்று அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
இருந்தாலும் அவர் தொடர்ந்து சுப்பிரிகாவிடம் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி தொந்தரவு செய்து உள்ளார். இதையடுத்து பொள்ளாச்சி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் தங்கதுரையை பிடித்து எச்சரித்தனர். அதைத்தொடர்ந்து அவர் இனிமேல் சுப்பிரிகாவை தொந்தரவு செய்ய மாட்டேன் என்று எழுதி கொடுத்துவிட்டு சென்றார்.
இந்த நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் 13-ந் தேதி தங்கதுரை, சுப்பிரிகாவின் செல்போனுக்கு தொடர்பு கொண்டார். ஆனால் அவர், போனை எடுத்து பேசாமல் இணைப்பை துண்டித்துவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த தங்கதுரை, சந்திரன் வீட்டிற்கு சென்று வெளியே நின்று, உடனே வெளியே வருமாறு சுப்பிரிகாவை அழைத்தார்.
அப்போது சுப்பிரிகாவின் தாயார் செல்வி வெளியே வந்து, நீ அவளிடம் பேச வேண்டிய அவசியம் இல்லை, அவளுக்கும் உன்னிடம் பேச இஷ்டம் இல்லை என்று கூறி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த தங்கதுரை அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்து சுப்பிரிகாவை சந்தித்து தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினார்.
அதற்கு அவர் எனது பெற்றோர் சொல்படிதான் நான் நடப்பேன், என்னிடம் பேசாதே வெளியே போ என்று கூறினார். இதில் ஆத்திரம் அடைந்த தங்கதுரை, எனக்கு கிடைக்காத நீ, வேறு யாருக்கும் கிடைக்க கூடாது என்றுக்கூறி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சுப்பிரிகாவை சரமாரியாக குத்தினார். இதைத்தடுக்க வந்த செல்வி மற்றும் சுப்பிரிகாவின் சகோதரருக்கும் கத்திக்குத்து விழுந்தது. இந்த கத்திக்குத்தில் படுகாயம் அடைந்த சுப்பிரிகா பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்த புகாரின்பேரில் பொள்ளாச்சி கிழக்கு போலீசார் கொலை, கொலை முயற்சி, கொலை செய்யும் நோக்கத்தில் அத்துமீறி உள்ளே நுழைதல் உள்பட 4 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து தங்கதுரையை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு கோவையில் உள்ள 4-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிந்ததை தொடர்ந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.
அதன்படி குற்றம் சாட்டப்பட்ட தங்கதுரைக்கு கொலை செய்தல் பிரிவுக்கு சாகும்வரை ஆயுள் தண்டனையும் (வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டும்), சுப்பிரிகாவின் தாயார் மற்றும் சகோதரரை கத்தியால் குத்தி கொல்ல முயன்றதற்கு தலா 7 ஆண்டு சிறையும், கொலை செய்யும் நோக்கத்தில் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்ததற்கு 10 ஆண்டும், ரூ.41 ஆயிரம் அபராதமும், இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி பூர்ண ஜெயஆனந்த் தீர்ப்பு கூறினார். இதில் அரசு தரப்பில் வக்கீல் பாபுராம் ஆஜராகி வாதாடினார்.
Related Tags :
Next Story