பெங்களூருவில் பரபரப்பு டி.கே.சிவக்குமாருடன் பா.ஜனதா எம்.எல்.ஏ. திடீர் சந்திப்பு
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமாரை பா.ஜனதாவை சேர்ந்த ரேணுகாச்சார்யா எம்.எல்.ஏ. திடீரென சந்தித்து பேசினார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு,
கர்நாடக மந்திரிசபை சமீபத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டது. புதிதாக 10 மந்திரிகள் பதவி ஏற்றனர். பா.ஜனதாவை சேர்ந்த ரேணுகாச்சார்யா எம்.எல்.ஏ., தனக்கும் மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனால் அவருக்கு மந்திரி பதவி கிடைக்கவில்லை. இதனால் அவர் அதிருப்தியில் உள்ளார்.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமாரை பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று ரேணுகாச்சார்யா எம்.எல்.ஏ. நேரில் சந்தித்து பேசினார். அவர்கள் கர்நாடக அரசியல் நிலவரம் குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது.
ஒப்பிட வேண்டாம்
இந்த சந்திப்புக்கு பிறகு ரேணுகாச்சார்யா எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-
“எங்கள் ஊரில் ஒரு நிகழ்ச்சி நடக்கிறது. அதற்காக அழைப்பிதழ் கொடுக்க டி.கே.சிவக்குமார் வீட்டுக்கு வந்தேன். எங்கள் இருவரிடையே நல்ல நட்புறவு உள்ளது. டி.கே.சிவக் குமார் மூத்தவர். நான் அவரைவிட இளையவன். என்னை அவருடன் ஒப்பிட வேண்டாம்.
மேல்-சபை இடைத்தேர்தலில் எங்கள் கட்சியின் வேட்பாளராக லட்சுமண் சவதி உள்ளார். அவருக்கு வாக்களிப்போம். அவரை தோற்கடிக்கும் தரம் தாழ்ந்த முயற்சியை செய்ய மாட்டேன். மந்திரிகளுக்கு இலாகாவை மாற்றுவது என்பது முதல்-மந்திரியின் அதிகாரத்திற்கு உட்பட்டது. அதுபற்றி நான் கருத்து கூற மாட்டேன்“.
இவ்வாறு அவர் கூறினார்.
பரபரப்பு
இருப்பினும் டி.கே.சிவக்குமாரை பா.ஜனதாவை சேர்ந்த ரேணுகாச்சார்யா சந்தித்து பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story