டெல்டா மாவட்டங்களில் 1,345 நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு - அமைச்சர் காமராஜ் தகவல்
டெல்டா மாவட்டங்களில் 1,345 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன என அமைச்சர் காமராஜ் கூறினார்.
திருவாரூர்,
திருவாரூர் மாவட்டத்தில் சம்பா அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாவட்டம் முழுவதும் தேவையான இடங்களில் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் நேற்று திருவாரூர் அருகே புலிவலம் நெல் கொள்முதல் நிலையத்தை அமைச்சர் ஆர்.காமராஜ் திடீர் ஆய்வு செய்தார்.
அப்போது கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளின் எடையினை சரி பார்த்தார். நெல் மூட்டைகளின் எடையளவு எந்தவித மாறுபாடு இருக்க கூடாது. இல்லையென்றால் நெல் கொள்முதல் நிலையம் கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டு ரத்து செய்யப்படுவதுடன், சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஊழியர்களுக்கு அறிவுறுத்தினார்.
அங்கு இருந்த விவசாயிகளிடம் நெல்லை விற்பனை செய்வதில் ஏதேனும் குறைகள் உள்ளதாக என கேட்டறிந்தார். பின்னர் அமைச்சர் ஆர்.காமராஜ், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழக அரசு விவசாயிகள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி வருகிறது. அந்த வழியில் டெல்டா பகுதியில் விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்முதல் செய்திட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. அதன்படி டெல்டா மாவட்டங்களில் மட்டும் இதுவரை இல்லாத வகையில் 1,345 நெல் கொள்முதல் நிலையங்களும், டெல்டா அல்லாத மாவட்டங்களில் 310 நெல் கொள்முதல் நிலையங்களும் என மொத்தம் 1,655 கொள்முதல் நிலையங்களும் திறக்கப்பட்டு எந்தவித குறைபாடின்றி விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதுவரை 5 லட்சத்து 40 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
டெல்லியில் ஆட்சி மாற்றம் ஏற்படவில்லை. ஆட்சி தக்க வைக்கப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நல்ல விஷயங்கள் நடைபெறும் போது எதிர்கட்சி தலைவரான மு.க.ஸ்டாலின் வரவேற்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது அரசு உணவுத்துறை கூடுதல் தலைமை செயலாளர் தயானந்த் கட்டாரியா, நுகர்பொருள் வாணிப கழக நிர்வாக இயக்குனர் சுதாதேவி, உணவு பொருள் குற்ற புலனாய்வு இயக்குனர் பிரதீப் வி.பிலிப், கலெக்டர் ஆனந்த் ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story