தனியார் நிறுவனங்களில் கன்னடர்களுக்கு வேலை வழங்க கோரி கர்நாடகத்தில் இன்று முழுஅடைப்பு வாடகை கார்-ஆட்டோக்கள் ஓடாது


தனியார் நிறுவனங்களில் கன்னடர்களுக்கு வேலை வழங்க கோரி   கர்நாடகத்தில் இன்று முழுஅடைப்பு   வாடகை கார்-ஆட்டோக்கள் ஓடாது
x
தினத்தந்தி 12 Feb 2020 11:00 PM GMT (Updated: 12 Feb 2020 7:51 PM GMT)

தனியார் நிறுவனங்களில் கன்னடர் களுக்கு வேலை வழங்க வேண்டும் என்பது உள்பட 14 பரிந்துரைகளை உள்ளடக்கிய சரோஜினி மகிஷி அறிக்கையை அமல்படுத்த கோரி கர்நாடகத்தில் இன்று (வியாழக்கிழமை) முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதையொட்டி வாடகை கார், ஆட்டோக்கள் ஓடாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

பெங்களூரு, 

கர்நாடகத்தில் 1983-ம் ஆண்டு ராமகிருஷ்ண ஹெக்டே முதல்-மந்திரியாக இருந்தார்.

58 பரிந்துரைகள்

அப்போது, சரோஜினி மகிஷி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழு 3 ஆண்டுகளுக்கு பிறகு 1986-ம் ஆண்டு பல்வேறு அம்சங்களை ஆராய்ந்து 58 பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை அரசுக்கு வழங்கியது.

அதில் தனியார் நிறுவனங்களின் வேலை வாய்ப்புகளை முழுமையாக கன்னடர்களுக்கு வழங்க வேண்டும், அரசு வேலை வாய்ப்புகளில் 90 சதவீதம் கன்னடர் களுக்கு ஒதுக்க வேண்டும் என்ற அம்சமும் இடம் பெற்றுள்ளது. இந்த பரிந்துரைகளில் தனியார் நிறுவனங்களின் வேலை வாய்ப்புகளை கன்னடர்களுக்கு ஒதுக்குவது உள்பட 12 பரிந்துரைகளை மாநில அரசு அமல்படுத்தவில்லை. இவை தவிர பெரும்பாலான பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டன.

கன்னடர்களுக்கு ஒதுக்க வேண்டும்

இந்த நிலையில் எச்.பி.நாகேஷ் தலைமையிலான கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு ஒன்று, சரோஜினி மகிஷி அறிக்கையில் கூறப்பட்டுள்ள தனியார் நிறுவனங்களின் வேலை வாய்ப்புகளை கன்னடர்களுக்கு ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி 13-ந் தேதி (அதாவது இன்று) முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இந்த முழு அடைப்புக்கு வாடகை கார்கள், ஆட்டோ ஓட்டுனர் சங்கங்கள், தெருவோர வியாபாரிகள் சங்கங்கள் உள்பட பல்வேறு சங்கங்கள் ஆதரவு தெரிவித்து உள்ளன. இந்த முழுஅடைப்பையொட்டி கடைகள், வணிக நிறுவனங்கள் மூடப்படும் என்று கூறப்படுகிறது. பெட்ரோல் விற்பனை நிலையங்களின் சேவையில் பாதிப்பு இருக்காது என்று சொல்லப் படுகிறது. இந்த போராட்டத்துக்கு 700-க்கும் மேற்பட்ட பல்வேறு கன்னட சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் கர்நாடக ரக்‌ஷண வேதிகே, கன்னட சலுவளி வாட்டாள் கட்சி உள்பட சில முக்கியமான அமைப்புகள் முழு அடைப்புக்கு ஆதரவு இல்லை என்று அறிவித்து உள்ளன.

வாடகை கார்கள், ஆட்டோக்கள் ஓடாது

முழுஅடைப்பை முன்னிட்டு பெங்களூருவில் வாடகை கார்கள், ஆட்டோக்கள் ஓடாது என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் அரசு பஸ்கள், மெட்ரோ ரெயில் வழக்கம்போல் ஓடும் என்று அந்த நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். மருத்துவமனைகள் எப்போதும் போல் இயங்கும். போக்குவரத்து துறையை நிர்வகிக்கும் துணை முதல்-மந்திரி லட்சுமண்சவதி, கர்நாடகத்தில் அரசு பஸ்கள் எப்போதும் போல் ஓடும் என்றும், போக்குவரத்து ஊழியர் சங்கங்கள் பணிக்கு வருவதாக அறிவித்து உள்ளதாகவும் தெரிவித்தார்.

கர்நாடக அரசின் பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ் குமார், அந்தந்த மாவட்டத்தில் நிலவும் நிலைமையை பொறுத்து மாவட்ட கலெக்டர்களே பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை விடுவது குறித்து முடிவு எடுக்கலாம் என்று தெரிவித்துள்ளார். தனியார் பள்ளி-கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என்று சொல்லப்படுகிறது. கர்நாடக அரசு ஊழியர் சங்கம், அரசு ஊழியர்கள் வழக்கம் போல் பணிக்கு வருவார்கள் என்று அறிவித்துள்ளது.

பலத்த பாதுகாப்பு

முழு அடைப்பு நடைபெற்றாலும், மருத்துவமனைகள், மருந்து கடைகள் திறக்கப்பட்டிருக்கும். ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயங்குவதில் எந்த பிரச்சினையும் இருக்காது.

முழுஅடைப்பை முன்னிட்டு முன்எச்சரிக்கை நடவடிக்கையாக பெங்களூரு, மைசூரு, மங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.

Next Story