கவர்னரை காரணம் காட்டி தப்பிக்காமல், ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரையும் துணிச்சலாக விடுதலை செய்ய வேண்டும் - இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் பேட்டி


கவர்னரை காரணம் காட்டி தப்பிக்காமல், ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரையும் துணிச்சலாக விடுதலை செய்ய வேண்டும் - இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் பேட்டி
x
தினத்தந்தி 13 Feb 2020 3:45 AM IST (Updated: 13 Feb 2020 1:53 AM IST)
t-max-icont-min-icon

கவர்னரை காரணம் காட்டி தப்பிக்காமல் ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரையும் துணிச்சலாக விடுதலை செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.

விழுப்புரம்,

விழுப்புரத்தில் நேற்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயலாளர் ஏ.வி.சரவணன், பொருளாளர் கலியமூர்த்தி, மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் மணிவாசகம், வட்ட செயலாளர் நிதானம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கூட்டம் முடிந்ததும் மாநில செயலாளர் முத்தரசன், நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

டெல்லி தேர்தலில் கெஜ்ரிவால் கட்சியை மீண்டும் வெற்றி பெற வைத்த மக்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறோம். ராஜீவ் கொலை கைதிகள் பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பி வைத்தது. அதோடு எங்கள் வேலை முடிந்துவிட்டது என்று ஆளுங்கட்சியினர் திரும்ப, திரும்ப கூறி வருகின்றனர். அரசின் பொறுப்பற்ற செயலை கண்டிக்கும் வகையில் உங்கள் வேலை முடியவில்லை, கவர்னரிடம் கேட்டு பதில் சொல்லுங்கள் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. கவர்னரை காரணம் காட்டி இதுவரை தப்பித்து வந்த தமிழக அரசு, இனியும் காலம் தாழ்த்தாமல் 7 பேரையும் விடுதலை செய்ய துணிச்சலாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான், மேற்கு வங்காளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன. இன்றைக்கு புதுச்சேரி மாநில அரசும் மிக துணிச்சலாக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. தமிழக அரசும் சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். வருகிற 16-ந் தேதி கூடும் சட்டப்பேரவை கூட்டத்தில் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும்.இயற்கை சீற்றத்தினால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருவதால் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு வழங்கப்படுகிற மானியத்தை குறைக்கக்கூடாது. விளைபொருட்களுக்கான விலையை விவசாயியே தீர்மானிக்கும் நிலையை ஏற்படுத்த வேண்டும். கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத்தொகையை உடனே வழங்க வேண்டும்.

காவல்துறையில் வாக்கி- டாக்கி வாங்கியதில் ஊழல், டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் பெரும் ஊழல் போன்றவை அரசியல் செல்வாக்கு உள்ளவர்களின் உதவியில்லாமல் நடந்திருக்க முடியாது. எனவே ஊழலில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்றைக்கு சமையல் எரிவாயு விலை உயர்ந்துள்ளது. பா.ஜ.க. அரசு, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு நன்றி விசுவாசமாக செயல்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story