சேலத்தில் குவாரியில் வெடிவைத்தபோது பறந்து வந்த கல் கழுத்தை வெட்டியதில் தொழிலாளி சாவு உறவினர்கள் போராட்டம்


சேலத்தில் குவாரியில் வெடிவைத்தபோது பறந்து வந்த கல் கழுத்தை வெட்டியதில் தொழிலாளி சாவு உறவினர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 12 Feb 2020 9:01 PM GMT (Updated: 12 Feb 2020 9:01 PM GMT)

சேலத்தில் குவாரியில் வெடிவைத்தபோது பறந்து வந்த கல் கழுத்தை வெட்டியதில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார். இதையொட்டி உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம்,

சேலம் எருமாபாளையம் குதிரைபாலகரடு பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 45). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு கல்குவாரியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். வழக்கமாக தினமும் வேலைக்கு செல்லும் அவர் நேற்று உடல் நிலை சரியில்லாத காரணத்தால் குவாரிக்கு வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். மாலை 4 மணி அளவில் அவர் வீட்டின் அருகே நடந்து சென்றார். அப்போது அங்கு சிலர் ஆடு மேய்த்துக்கொண்டிருந்தனர்.

இதை பார்த்த பெருமாள், அவர்களிடம் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு கல்குவாரியில் தொழிலாளர்கள் வெடி வைத்து உள்ளனர். சிறிது நேரத்தில் அது பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் பாறைகள் உடைந்தன.

அப்போது அந்த குவாரியில் இருந்து ஒரு பெரிய கல் பறந்து வந்து கண் இமைக்கும் நேரத்தில் பெருமாளின் கழுத்து பகுதியில் விழுந்தது. கல் அரிவாள் போல் கூர்மையாக இருந்ததால் பெருமாளின் பாதி கழுத்தை அந்த கல் வெட்டியது. இதனால் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த அவர் சிறிது நேரத்தில் துடி துடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதை பார்த்த அங்கு ஆடு மேய்த்துக்கொண்டிருந்தவர்கள் ‘அய்யோ, அம்மா‘ என்று சத்தம் போட்டனர். இவர்களின் சத்தம் கேட்டு அருகில் வீட்டில் இருந்த பெருமாளின் மனைவி செல்லம்மாள் மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு ஓடி வந்தனர். அங்கு ரத்த வெள்ளத்தில் பெருமாள் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் பெருமாளின் உடலை கட்டிப்பிடித்து கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

இது பற்றி தகவல் அறிந்த கிச்சிப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் பெருமாள் உடலை பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்செல்ல முயன்றனர். அப்போது பெருமாள் உடலை எடுக்க கூடாது என்றும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி பெருமாளின் உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

இது குறித்து பெருமாள் அந்த பகுதியில் வசிப்பவர்கள் கூறும் போது, இந்த பகுதியில் ஏராளமான கல்குவாரிகள் உள்ளன. குவாரிகளில் வெடி வைக்கும் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதுவும் செய்வது இல்லை. திடீரென்று வெடி வைத்து விடுகிறார்கள். இதனால் பலர் விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே பெருமாளின் இறப்புக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இனிமேல் முன்னெச்சரிக்கையுடன் வெடி வைக்க வேண்டும், என்று கூறினர்.

தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சேலம் கனிம வளத்துறை துணை இயக்குனர் (பொறுப்பு) பாலமுருகன் தலைமையில் அலுவலர்கள் அங்கு வந்து போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது அவர்களிடம் உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இனி வரும் காலங்களில் குவாரிகளில் வெடி வைக்கும் போது முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். அதன்பிறகு அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

இதையடுத்து போலீசார், பெருமாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குவாரியில் வைத்த வெடி வெடித்ததில் பறந்து வந்த கல் கழுத்தை வெட்டியதில் தொழிலாளி இறந்த சம்பவம் நேற்று அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

உயிரை காப்பாற்ற கையால் கல்லை தடுத்த பெருமாள்
வெடி வைப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு தான் பெருமாள் வீட்டில் இருந்து வெளியில் சென்றார். பின்னர் சம்பவம் நடந்த குவாரி அருகே பேசிக்கொண்டிருந்தபோது திடீரென்று வெடி சத்தம் கேட்டதும் அந்த திசையை நோக்கி பார்த்து உள்ளார். அப்போது ஒரு கல் தன்னை நோக்கி வருவதை பார்த்த அவர் உயிரை காப்பாற்ற தன்னை தாக்க வந்த கல்லை கையால் தடுத்து உள்ளார். ஆனால் அதி வேகமாக வந்த கல்லை தடுக்க முடியவில்லை. இதனால் கண் இமைக்கும் நேரத்தில் அவரது கழுத்தை தாக்கி விட்டது.

Next Story