மாவட்ட செய்திகள்

இளம்வயது திருமணம் செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை கலெக்டர் மெகராஜ் எச்சரிக்கை + "||" + On young married couples Act according to law Collector Warning

இளம்வயது திருமணம் செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை கலெக்டர் மெகராஜ் எச்சரிக்கை

இளம்வயது திருமணம் செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை கலெக்டர் மெகராஜ் எச்சரிக்கை
இளம் வயது திருமணம் செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் மெகராஜ் கூறினார்.
நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை வல்வில் ஓரி கலையரங்கில் இளம்வயது திருமணம் தடுத்தல், சட்டப்படி குழந்தைகளை தத்தெடுத்தல், பெண் குழந்தைகளை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. இந்த கருத்தரங்கிற்கு மாவட்ட கலெக்டர் மெகராஜ் தலைமை தாங்கினார். சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் சந்திரசேகரன் முன்னிலை வகித்தார். இதில் கலெக்டர் பேசும்போது கூறியதாவது:-


பெண் குழந்தைகளுக்கு 18 வயதிற்கு மேல் தான் திருமணம் செய்து வைக்க வேண்டும். அந்த வயதில் தான் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பெண் குழந்தைகள் திருமணத்தை எதிர்கொள்ள தயாராக முடியும். 18 வயதிற்கு கீழ் பெண் குழந்தைகளை திருமணம் செய்து கொடுப்பது சட்ட விரோதமானதாகும். அவ்வாறு இளம் வயது திருமணம் நடைபெற்றால் சம்பந்தப்பட்ட அனைத்து நபர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் நாடுதான் முன்னேற்றம் அடையும். தமிழ்நாட்டில் அனைத்து திட்டங்களும் பெண்களை மையப்படுத்தி நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இவை குறித்து கொல்லிமலை மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகதான் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள், கருத்தரங்கம், மாணவர்களுக்கான பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு உள்ளன.

பெண் குழந்தைகள் பள்ளி கல்வியோடு நிற்காமல் கல்லூரி படிப்பையும் முடித்து தாங்களே சம்பாதித்து, பொருளாதார தன்னிறைவு பெற வேண்டும். இங்கு உள்ள அனைவரும் தங்கள் பெண் குழந்தையை கல்லூரி படிப்பை முடித்த பின்னர் தான் திருமணம் செய்து கொடுப்போம் என்று சபதம் ஏற்க வேண்டும். மலைவாழ் மக்கள் பட்டப்படிப்பு முடித்தால் அரசு வேலை கட்டாயம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதையொட்டி பெண்களின் முன்னேற்றம் குறித்து நடத்தப்பட்ட கட்டுரை போட்டி, கவிதை போட்டி, பேச்சுப்போட்டி, ஓவிய போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு கலெக்டர் பரிசுகளை வழங்கினார். மேலும் 2 பெண் குழந்தைகளை பெற்று கர்ப்பத்தடை செய்து கொண்ட பெண்களுக்கு பரிசுகளை வழங்கினார். தொடர்ந்து 50-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு வருவாய் துறையின் சார்பில் இந்து மலையாளி சாதிச்சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கொல்லிமலை அரசு மாதிரி பள்ளி மாணவிகள், விதவை மறுமணம் குறித்தும், பெண்கள் எந்த ஒரு நிலையிலும் தைரியமாக கல்வியையும், திறமைகளையும் வளர்த்து கொள்ள வேண்டும் என்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான நாடகங்களை நடத்தினார்கள். கொல்லிமலை அரசு மருத்துவமனை செவிலியர்கள் முறையாக கை கழுவுதல் குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர். மேலும் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகளும் நடந்தன. விழிப்புணர்வு ஊர்வலமும் நடைபெற்றது.

இந்த கருத்தரங்கில் குடும்பநலம் குறித்து சேலம் மண்டல குடும்பநல துணை இயக்குனர் டாக்டர் வளர்மதி, பிரசவத்தின்போது ஏற்படும் மரணத்தை தவிர்த்தல் மற்றும் ரத்த சோகையில் இருந்து விடுபடுதல் குறித்து பரமத்திவேலூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர் சாந்தி, சட்டரீதியான குழந்தை தத்தெடுப்பு குறித்து மாநில தத்துவ ஆதார மைய திட்ட அலுவலர் கிறிஸ்துதாஸ், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் குறித்து மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் ரஞ்சிதா பிரியா ஆகியோர் பேசினர்.

இதில் நாமக்கல் உதவி கலெக்டர் கோட்டைக்குமார், மருத்துவ நலப்பணிகள் (இணை இயக்குனர்) சாந்தி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன், கொல்லிமலை ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் மாதேஸ்வரி அண்ணாதுரை உள்பட உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், கூட்டுறவாளர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.