குரூப்-4 தேர்வு முறைகேடு: புரோக்கர் ஜெயக்குமாரை சிவகங்கை அழைத்து வந்து விசாரணை - 3 கிராம நிர்வாக அலுவலர்களுக்கு சிக்கல்
குரூப்-4 தேர்வு முறைகேட்டில் சிக்கிய புரோக்கர் ஜெயக்குமாரை சிவகங்கையில் உள்ள பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் 3 கிராம நிர்வாக அலுவலர்களை விசாரணைக்காக சென்னைக்கு அழைத்து செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.
சிவகங்கை,
குரூப்-4 தேர்வு முறைகேட்டில் புரோக்கராக செயல்பட்டு வந்த ஜெயக்குமார் உள்பட பலரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் ஜெயக்குமார் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், நடைபெற்று முடிந்த கிராம நிர்வாக அலுவலர் தேர்வு, குரூப்-2 ஏ தேர்வு ஆகிய தேர்வுகளில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றது தெரிய வந்துள்ளது. இதையடுத்து சென்னையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தனித்தனியாக இது குறித்து வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.
மேலும் இந்த வழக்கு விசாரணையின் போது தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் புரோக்கர்களை தேர்வு செய்து அவர்கள் மூலம் ஜெயக்குமார் பல கோடி ரூபாய் வரை பணம் பெற்றுக்கொண்டது தெரிய வந்துள்ளது. இதனால் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஜெயக்குமாரை போலீஸ் காவலில் எடுத்து ராமேசுவரம், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அழைத்து சென்று அவர் மூலம் முறைகேடு செய்து தேர்வில் வெற்றி பெற்றவர்களின் விவரங்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் ஜெயக்குமார் மூலமாக பணம் கொடுத்து தற்போது கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பல்வேறு பணிக்கு தேர்வு செய்யப்பட்ட அரசு ஊழியர்கள் விவரங்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் சேகரித்து வருகின்றனர். இதில் சிவகங்கை மாவட்டத்தில் 3 கிராம நிர்வாக அலுவலர்கள் ஜெயக்குமார் மூலம் பல்வேறு மோசடி செய்து பணிக்கு சேர்ந்துள்ளது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் விசாரணைக்காக சென்னைக்கு அழைத்து செல்ல சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்துள்ளதாக தெரிய வருகிறது.
Related Tags :
Next Story