ராஜபாளையம் நகர் பகுதியில், திட்டப்பணிகள் நிறுத்தப்பட்டதை கண்டித்து தி.மு.க.வினர் உண்ணாவிரதம் - தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது


ராஜபாளையம் நகர் பகுதியில், திட்டப்பணிகள் நிறுத்தப்பட்டதை கண்டித்து தி.மு.க.வினர் உண்ணாவிரதம் - தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 12 Feb 2020 10:15 PM GMT (Updated: 13 Feb 2020 12:06 AM GMT)

ராஜபாளையம் நகர் பகுதியில் திட்டப்பணிகள் நிறுத்தப்பட்டதை கண்டித்து தி.மு.க. சார்பில் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமையில் உண்ணாவிரதம் நடந்தது.

ராஜபாளையம்,

ராஜபாளையம் நகர் பகுதியில் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்ட பணிகள், ரெயில்வே மேம்பால பணிகள் நிறுத்தப்பட்டதை கண்டித்தும், புதிய பஸ் நிலையத்தில் இருந்து தென்காசிரோடு இணைப்புச்சாலை பணியை உடனடியாக தொடங்க வலியுறுத்தியும், தமிழக அரசை கண்டித்தும் தி.மு.க. சார்பில் ராஜபாளையம் ஜவகர் மைதானத்தில் உண்ணாவிரத போராட்டம் தங்கப்பாண்டியன்எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது. தனுஷ் குமார் எம்.பி. முன்னிலை வகித்தார். நகர செயலாளர் ராமமூர்த்தி அனைவரையும் வரவேற்று பேசினார்.

அப்போது அங்குவந்த போலீஸ் துணை சூப்பிரண்டு நாகசங்கர், நகராட்சி அதிகாரிகள், என்ஜினீயர் நடராஜ், நெடுஞ்சாலை துறை அதிகாரி பொன்முரளி, வருவாய் துறை ஆய்வாளர் அழகர்ராஜ், குடிநீர் வடிகால் வாரிய உதவி நிர்வாக என்ஜினீயர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் ராஜபாளையம் நகரில் நடைபெற்றுவரும் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் 6 மாத காலத்தில் விரைவில் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும், ரெயில்வே மேம்பால பணிகள் தொடர்ந்து நடைபெற விரைவில் நிலம் கையகப்படுத்தி விரைவில் பணி முடிவடையும், இணைப்புச்சாலை பணிகள் விரைவில் தொடங்க அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து தற்காலிகமாக உண்ணாவிரத போராட்டம் கைவிடப்பட்டது.

பின்னர் எம்.எல்.ஏ. கூறியதாவது:- 3 மாதங்களில் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகளை முடிந்து புதிய சாலை அமைக்கப்படும். மேம்பால பணிகளுக்கு நிலம் கையகப்படுத்தப்பட்ட பிறகு 8 மாதங்களில் மேம்பால பணிகள் முடிக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததால், போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளோம். பணிகள் நடைபெறாமல் இருந்தால் விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெறும். தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்திற்காக தோண்டப்பட்ட குழியில் சரியாக மூடாமல் சாலையை சரியாக சமன் படுத்தாமல் உள்ளதால் பொதுமக்கள், பள்ளி குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். அதனையும் உடனடியாக சரி செய்ய நகராட்சி என்ஜினீயரிடம் வலியுறுத்தப்பட்டு உள்ளது. அதிகாரிகள் குறிப்பிட்டுள்ள காலகெடுவுக்குள் பணியை முடிக்காவிட்டால் பெரிய அளவில் தி.மு.க. சார்பில் போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

உண்ணாவிரதத்தில் யூனியன் தலைவர் சிங்கராஜ், விருதுநகர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் ராஜா அருண்மொழி, ஒன்றிய செயலாளர் தங்கச்சாமி, பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சுமதி ராமமூர்த்தி, மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் நவமணி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வேல்முருகன், சியாம் ராஜா, மணிகண்ட ராஜா, மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர்கள், கழக நிர்வாகிகள், பெண்கள், வியாபாரிகள், சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.

Next Story