அரசு ஆஸ்பத்திரியில் காவலாளிகளால் தாக்கப்பட்ட தொழிலாளி சாவு; உறவினர்கள் சாலை மறியல்


அரசு ஆஸ்பத்திரியில் காவலாளிகளால் தாக்கப்பட்ட தொழிலாளி சாவு; உறவினர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 14 Feb 2020 4:00 AM IST (Updated: 13 Feb 2020 6:29 PM IST)
t-max-icont-min-icon

தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் காவலாளிகளால் தாக்கப்பட்ட தொழிலாளி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:–

பத்மநாபபுரம், 

தக்கலை அருகே திக்கணங்கோடு பகுதியை சேர்ந்தவர் மரிய சுரேஷ் (வயது 39), கட்டிட தொழிலாளி. இவரது மனைவி கஸ்தூரி (வயது 37). இவருடைய தாயார் உடல் நலம் பாதிக்கப்பட்டு தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்தார். அவரை கஸ்தூரி அருகில் இருந்து கவனித்து வந்தார். இதற்காக அவர் ஆஸ்பத்திரியில் தங்கியிருந்தார்.

கடந்த 9–ந் தேதி இரவு மரிய சுரேஷ் ஆஸ்பத்திரியில் தங்கியுள்ள மனைவியை பார்ப்பதற்காக சென்றார். அப்போது, அங்கு பணியில் இருந்த 2 காவலாளிகள் அவரை தடுத்து நிறுத்தினர். அப்போது அவர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் காவலாளிகள் சேர்ந்து மரிய சுரேசை தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த மரிய சுரேஷ் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த சம்பவம் குறித்து தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில், மரிய சுரேஷ் நேற்று அதிகாலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் அவரது உறவினர்கள் ஏராளமானோர் நேற்று காலையில் தக்கலை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். பின்னர், அவர்கள் போலீஸ் நிலையம் முன்பு தேசிய நெடுஞ்சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் உறவினர்களுக்கு ஆதரவாக பிரின்ஸ் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. லீமாரோஸ், ஜனநாயக கிறிஸ்தவ ஐக்கிய பேரவை தலைவர் ஜார்ஜ் பொன்னையா, தி.மு.க.வை சேர்ந்த ரமேஷ்பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர். அவர்கள், குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் எனவும், அதுவரை உடலை வாங்க மாட்டோம் எனவும் அறிவித்தனர்.

உடனே உறவினர்களிடம் இன்ஸ்பெக்டர் அருள் பிரகாஷ், சப்–இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, குற்றவாளிகள் உடனே கைது செய்யப்படுவார்கள் என போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்த போராட்டத்தால் நாகர்கோவில்–திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதற்கிடையே மரிய சுரேஷ் இறந்ததும் போலீசார் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்தனர். இதுதொடர்பாக தக்கலை அரசு ஆஸ்பத்திரி காவலாளி ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story