2 மணி நேரத்தில் ஹெல்மெட், சீட்பெல்ட் அணியாத 1,579 பேர் மீது வழக்கு


2 மணி நேரத்தில் ஹெல்மெட், சீட்பெல்ட் அணியாத 1,579 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 13 Feb 2020 10:15 PM GMT (Updated: 13 Feb 2020 4:14 PM GMT)

வேலூர் மாவட்டத்தில் 2 மணி நேரம் நடந்த சிறப்பு வாகன தணிக்கையில் ஹெல்மெட், சீட் பெல்ட் அணியாத 1,579 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர்.

வேலூர், 

வேலூர் மண்டல அளவில் சாலை பாதுகாப்பு தொடர்பான ஆய்வுக்கூட்டம் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் கடந்த 4-ந் தேதி நடந்தது. இதில், தமிழக போக்குவரத்து முதன்மை செயலாளர் தென்காசி எஸ்.ஜவகர் கலந்து கொண்டு, சாலை விபத்துகளை குறைக்க மதுஅருந்தி விட்டு வாகனம் ஓட்டுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யவும், தினமும் வாகன தணிக்கை செய்து போக்குவரத்து விதி மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கவும் போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து வேலூர் சரக டி.ஐ.ஜி.காமினி உத்தரவின்பேரில் மதுஅருந்தி விட்டு வாகனம் ஓட்டுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் வேலூர் மாவட்டம் முழுவதும் சிறப்பு வாகன தணிக்கை நடத்த போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் உத்தரவிட்டார். அதன்படி வேலூர் உட்கோட்டத்தில் வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே, கிரீன்சர்க்கிள், சங்கரன்பாளையம், தொரப்பாடி ஆகிய 4 இடங்களில் இன்ஸ்பெக்டர்கள் நாகராஜ், நந்தகோபால், அழகுராணி, சுந்தரமூர்த்தி ஆகியோர் தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஹெல்மெட், சீட்பெல்ட் அணியாத வாகன ஓட்டிகள், இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர், செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டியவர்கள் உள்பட போக்குவரத்து விதிமீறியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

வேலூர் கிரீன் சர்க்கிளில் நடந்த வாகன தணிக்கையை போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் ஆய்வு செய்தார். அப்போது அவர் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைப்பது தொடர்பாக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விஜயக்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.

இதேபோன்று காட்பாடி உட்கோட்டத்தில் கிறிஸ்டியான்பேட்டை, சித்தூர் பஸ்நிலையம், குடியாத்தம் உட்கோட்டத்தில் குடியாத்தம் புதிய பஸ்நிலையம், வி.கோட்டா சாலை ஆகிய இடங்களிலும் சிறப்பு வாகன தணிக்கை நடந்தது.

வேலூர் மாவட்டம் முழுவதும் 8 இடங்களில் காலை 10 மணி முதல் 12 மணி வரை 2 மணி நேரம் நடந்த வாகன தணிக்கையில் ஹெல்மெட், சீட்பெல்ட் அணியாத 1,579 பேர் மீதும், செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டியவர்கள், அதிகவேகமாக வாகனம் ஓட்டியவர்கள் உள்பட போக்குவரத்து விதிகளை மீறியவர்கள் 231 பேர் என மொத்தம் 1,810 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story