கூடலூரில், டேன்டீ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
கூடலூரில் டேன்டீ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கூடலூர்,
நீலகிரி, வால்பாறை உள்ளிட்ட இடங்களில் தமிழக அரசின் தேயிலை தோட்ட கழகம்(டேன்டீ) இயங்கி வருகிறது. இங்கு தாயகம் திரும்பிய மக்கள் தோட்ட தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் கூடலூர் பகுதியில் அரசு தேயிலை தோட்டங்கள்(டேன்டீ) அதிகளவு உள்ளது. இங்கு நடுவட்டம், பாண்டியாறு, நெல்லியாளம், சேரம்பாடி, கொளப்பள்ளி, சேரங்கோடு மற்றும் குன்னூர், கோத்தகிரி பகுதியில் டேன்டீ உள்ளது. இங்கு ஆயிரக்கணக்கானவர்கள் பணியாற்றி வருகின்றனர். மாதந்தோறும் 7-ந் தேதி டேன்டீ நிர்வாகம் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கி வந்தது.
இந்த நிலையில் கடந்த ஜனவரி மாத சம்பளத்தை இதுவரை டேன்டீ நிர்வாகம் வழங்கவில்லை. இதனால் தோட்ட தொழிலாளர்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும் என நிர்வாகத்துக்கு தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் சம்பளம் வழங்கப்படவில்லை.
இதனால் டேன்டீ தொழிலாளர்கள், ஊழியர்கள் வழக்கம்போல் வேலைக்கு வருகின்றனர். பின்னர் சம்பளம் வழங்காததை கண்டித்து கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதேபோன்று நேற்று காலை 8 மணிக்கு பாண்டியாறு உள்ளிட்ட டேன்டீ பகுதியில் தோட்ட தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சில இடங்களில் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் சுமார் 1 மணி நேரத்துக்கு பிறகு வேலைக்கு சென்றனர். இந்த போராட்டத்துக்கு ஏ.ஐ.டி.யு.சி., சி.ஐ.டி.யு., எல்.பி.எப். உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் ஆதரவு அளித்துள்ளது. மேலும் சம்பளத்தை உடனடியாக வழங்கவில்லை எனில் தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து ஏ.ஐ.டி.யூ.சி. தலைவர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:-
பூடான், அசாம் உள்ளிட்ட இடங்களில் இருந்து தேயிலைத்தூள் அதிகளவு தென்மாநிலங்களுக்கு கொண்டு வரப்படுகிறது. இதனால் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மாநிலங்களில் விளையும் தேயிலையின் விற்பனை சரிந்துள்ளது. இதில் தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழகத்துக்கு சொந்தமான தேயிலைத்தூள் விற்பனை 86 சதவீதம் சரிந்துள்ளது. இதனால் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க கூட முடியாத வகையில் வருவாய் இன்றி டேன்டீ நிர்வாகம் திணறி வருகிறது.
எனவே அரசு உடனடியாக தலையிட்டு டேன்டீ தேயிலைத்தூள் விற்பனையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும். தவறும் பட்சத்தில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் டேன்டீ அலுவலகம் முன்பு விரைவில் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story