நீடாமங்கலத்தில் சாலையை சீரமைக்க வலியுறுத்தி, வர்த்தக சங்கத்தினர் மறியல் செய்ய முயற்சி - பேச்சுவார்த்தையில் உடன்பாடு


நீடாமங்கலத்தில் சாலையை சீரமைக்க வலியுறுத்தி, வர்த்தக சங்கத்தினர் மறியல் செய்ய முயற்சி - பேச்சுவார்த்தையில் உடன்பாடு
x
தினத்தந்தி 14 Feb 2020 4:00 AM IST (Updated: 13 Feb 2020 11:54 PM IST)
t-max-icont-min-icon

நீடாமங்கலத்தில் சாலையை சீரமைக்க வலியுறுத்தி வர்த்தக சங்கத்தினர் மறியல் செய்ய முயற்சி செய்தனர்.

நீடாமங்கலம், 

நீடாமங்கலம் நகரில் கடைவீதி, மெயின்ரோடு சாலை பல மாதங்களாக குண்டும், குழியுமாக போக்குவரத்திற்கு ஏற்றதாக இல்லை. இதனால் வாகனங்களில் செல்பவர்கள் மட்டுமின்றி, நடந்து செல்பவர்களும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர். இந்த சாலையில் செல்லும் வாகனங்கள் பழுதடைகின்றனர். மோட்டார் சைக்கிளில் செல்வோர் கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர்.

நீடாமங்கலம் வழியாக நூற்றுக்கணக்கான வாகனங்கள் செல்வதால் தூசியால் கடைகளில் உள்ள பொருட்கள் பாதிப்பு அடைகிறது. மேலும் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு சுவாச நோய் ஏற்படும் நிலை உள்ளது. இந்த சாலையை சீரமைக்க அரசியல் கட்சியினர், தொண்டு நிறுவனத்தினர், வர்த்தகர் சங்கத்தினர் பல முறை கோரிக்கை வைத்தனர். போராட்டங்களும் அறிவிக்கப்பட்டன. போராட்டம் அறிவித்தால் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்துவதோடு சரி சாலையை சீரமைப்பதில்லை.

இதனால் ஆத்திரமடைந்த வர்த்தகர் சங்கத்தினர் நேற்று நீடாமங்கலம் கடைவீதியில் சாலை மறியல் செய்வதாக முடிவெடுத்திருந்தனர். அதன்படி வர்த்தகர் சங்க தலைவர் ராஜாராமன் தலைமையில், வர்த்தகர்கள் நேற்று காலை 10 மணியளவில் நீடாமங்கலம் கடைவீதியில் திரண்டனர். பின்னர் சாலை மறியல் செய்ய சாலையில் வந்து நின்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த நீடாமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரியா மற்றும் நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் ஆனந்தரெட்டி, வருவாய்த்துறை அலுவலர்கள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து வர்த்தகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதை தொடர்ந்து வர்த்தகர்களை அங்கிருந்து தாசில்தார் அலுவலகத்திற்கு அழைத்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். தாசில்தார் கண்ணன் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் வருகிற 20-ந் தேதி முதல் சாலை சீரமைக்கும் பணி நடைபெறும் என தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் உத்தரவாதம் அளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் வர்த்தகர் சங்கத்தினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story