அரசு அலுவலக கோப்புகளில் தமிழை முழுமையாக பயன்படுத்த வேண்டும் - தமிழ் வளர்ச்சி துணை இயக்குனர் வலியுறுத்தல்
அரசு அலுவலக கோப்புகளில் தமிழை முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்று தமிழ் வளர்ச்சி துணை இயக்குனர் ராசேந்திரன் வலியுறுத்தி உள்ளார்.
நெல்லை,
தமிழ் ஆட்சி மொழி சட்டம் இயற்றப்பட்ட நாளை நினைவு கூறும் வகையில், ஆட்சி மொழி சட்ட வாரம் அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாடப்பட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையொட்டி நெல்லை மாவட்டத்தில் ஆட்சி மொழி வாரம் நேற்று தொடங்கப்பட்டது. இதன் தொடக்க நிகழ்ச்சியாக பாளையங்கோட்டை தெற்கு பஜாரில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் அனைத்து துறை அரசு பணியாளர்களுக்கு கணினி ஒருங்குறி (யுனிகோட்) பயிற்சி நேற்று தொடங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு நெல்லை மண்டல தமிழ் வளர்ச்சி துறை துணை இயக்குனர் ராசேந்திரன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறுகையில், “தமிழ் ஆட்சி மொழி சட்டம் தமிழ்நாட்டில் 1956-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. அலுவலக கோப்புகளில் தமிழை முழுமையாக பயன்படுத்த வேண்டும். வணிக நிறுவனங்களில் பெயர் பலகை தமிழில் வைக்கப்பட வேண்டும்” என்றார்.
அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ.சத்தியவள்ளி, பொதிகை தமிழ்ச்சங்க தலைவர் பே.ராசேந்திரன், கல்லூரி தமிழ்த்துறை தலைவர் மகாதேவன் ஆகியோரும் பேசினர். இதில் பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட தமிழ் வளர்ச்சி துறை உதவி இயக்குனர் ரெசினாள் மேரி நன்றி கூறினார்.
இதுதொடர்பாக தமிழ் வளர்ச்சி துறை அதிகாரிகள் கூறுகையில், “ஒரு வார காலத்துக்கு அம்மா மென்தமிழ் தமிழ் சொல்லாளர் ஒருங்குறி பயன்பாடு குறித்து ஊழியர்களுக்கு பயிற்சி அளித்தல், ஆட்சி மொழி மின்காட்சியுரை, தமிழில் வரைவுகள், குறிப்புகள் எழுதுவதற்கான பயிற்சி வகுப்பு, வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை வைக்க வலியுறுத்தல், ஆட்சி மொழி விழிப்புணர்வு ஊர்வலம், ஆட்சி மொழித்திட்ட விளக்க கூட்டம், ஆட்சி மொழி பட்டிமன்றம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன” என்றனர்.
Related Tags :
Next Story