ஆலங்குளம் அருகே மலையில் மான்கள் சரணாலயம் அமைக்கப்படுமா? - பொதுமக்கள் எதிர்பார்ப்பு
ஆலங்குளம் அருகே உள்ள மலையில் மான்கள் சரணாலயம் அமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
ஆலங்குளம்,
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே 2 கிலோ மீட்டர் தூரத்தில் நெல்லை-தென்காசி மெயின் ரோட்டில் ஒக்க நின்றான் மலை உள்ளது. இந்த மலையை சாலையில் இருந்து பார்த்தால் மணலை குவித்ததுபோல் காட்சி அளிக்கும். நெருங்கி சென்று பார்த்தால் அடர்ந்த காடுகள்போல் இருக்கிறது. சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து மலை காணப்படுகிறது.
ராமபிரான் இந்த மலை மீது ஏறி நின்று ஒரு காலை ஊன்றியும், ஒரு காலை தூக்கி கூர்ந்து நோக்கினார். அதனால் இந்த மலைக்கு ஒக்க நின்றான் மலை என்று பெயர் வந்ததாக புராணங்கள் கூறுகின்றன. அதேபோல் ஆஞ்சநேயர், சஞ்சீவி மலையை தூக்கி சென்றபோது ஒரு கல் இங்கு கீழே விழுந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த மலையில் விலை உயர்ந்த நெல்லி, வேம்பு, வாகை, புளிவேப்பாளை, உசில் உள்ளிட்ட மரங்கள் இருக்கின்றன. மேலும், இந்த மலையில் அபூர்வ வகையான மூலிகைகள் அதிகளவில் உள்ளன.
புள்ளிமான்கள், காட்டுநாய், காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகளும் உள்ளன. மழைக்காலங்களில் வரும் வெள்ளநீரை தேக்கி வைப்பதற்காக மலைப்பகுதியில் 15 சிமெண்டு தடுப்பணைகள் கட்டப்பட்டு உள்ளன.
ஒக்க நின்றான் மலையில் சுமார் 400-க்கும் மேற்பட்ட மான்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த மான்கள் உணவுக்காகவும், தண்ணீருக்காகவும் அடிக்கடி மலையில் இருந்து கீழே இறங்கி சாலைக்கு வருகின்றன. அப்போது வாகனங்கள் மோதி இறக்கின்றன. கோடைக்காலங்களில் அதிக அளவில் மான்கள் மலையில் இருந்து வெளியே வருகின்றன.
இந்த மலைக்கு மேல் ராமர் கோவில் உள்ளது. அந்த கோவிலுக்கு பக்தர்கள் சென்று வர பாதை வசதி செய்து தரப்பட்டு உள்ளது. மேலும், சாலை பகுதியில் மின்விளக்கு வசதியும் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. மலையில் ஒரு இடத்தில் ராமர் கால் தடம் இருப்பதாக கூறப்படுகிறது. ராமர் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் புள்ளிமான்களை கூட்டம், கூட்டமாக பார்த்ததாக கூறுகிறார்கள்.
மலை அடிவாரத்திலும் ஒரு ராமர் கோவில் உள்ளது. அதன் அருகே திருப்பாற்கடல் லட்சுமி நாராயணன் மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்துக்குள் நாராயணன் திருப்பாற்கடலில் வீற்றிருப்பது போல் சிலை அமைக்கப்பட்டு உள்ளது. மண்டபத்தை சுற்றி ஆறு போல் தண்ணீர் ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.
விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இயற்கை எழில் கொஞ்சும் மலையில் மான்களுக்கு தண்ணீர் வசதி செய்து கொடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது இந்த மலை நெல்லை வனச்சரக கட்டுப்பாட்டில் உள்ளது.
அந்த சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள், ‘மான்கள் பாதுகாப்பு குழு‘ என்று ஒரு அமைப்பை ஏற்படுத்தியுள்ளனர். அதன்மூலம் மான்களுக்கு மலையில் இருந்து கீழே இறங்கி செல்ல முடியாத அளவுக்கு வசதியை ஏற்படுத்தி உள்ளனர்.
இதுகுறித்து மான்கள் பாதுகாப்பு குழுவினரும், அந்த பகுதி மக்களும் கூறியதாவது:-
ஒக்க நின்றான் மலையில் ஏராளமான மான்கள் உள்ளன. இந்த மான்கள் உணவுக்காகவும், குடிநீருக்காகவும் மலையில் இருந்து கீழே இறங்கி வருகின்றன. மலைமேல் 6 தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டு உள்ளன.
அந்த தொட்டிகள் பராமரிப்பு இல்லாமல் இருந்தது. அதில் இருந்த சேறுகளையும், சகதிகளையும் அகற்றி சுத்தம் செய்தோம். தற்போது அந்த தொட்டிகளில் தண்ணீர் நிரப்பப்பட்டு உள்ளது. இந்த மலையை மான்கள் சரணாலயமாக அறிவிக்க வேண்டும். சுற்றுலா பயணிகள் அதிக அளவு வந்து செல்ல வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மான்கள் மலையை விட்டு வெளியே செல்லாமல் இருக்க தடுப்பு சுவர் அமைக்க வேண்டும். வரலாற்று சிறப்புமிக்க இந்த ஒக்க நின்றான் மலையின் பெருமைகளை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வு பிரசாரம் செய்ய வேண்டும்.
மேலும், இந்த மலையில் உள்ள மூலிகைகள், தீராத நோய்களையும் தீர்ப்பதாக கூறுகிறார்கள். இதுபற்றி விரிவான ஆராய்ச்சி நடத்த வேண்டும். இந்த மலையில் வளரும் அரிய மூலிகைகளை மக்கள் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story