தமிழக அரசு எந்த திட்டத்தை அறிவித்தாலும் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு குரல் கொடுப்பது அன்றாட பணிகளில் ஒன்றாகி விட்டது அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பேட்டி


தமிழக அரசு எந்த திட்டத்தை அறிவித்தாலும் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு குரல் கொடுப்பது அன்றாட பணிகளில் ஒன்றாகி விட்டது அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பேட்டி
x
தினத்தந்தி 13 Feb 2020 10:30 PM GMT (Updated: 13 Feb 2020 8:36 PM GMT)

தமிழக அரசு எந்த திட்டத்தை அறிவித்தாலும் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு குரல் கொடுப்பது அன்றாட பணிகளில் ஒன்றாகி விட்டது என்று அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கூறினார்.

திருச்சி,

தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனம் சார்பில் விவசாய விழிப்புணர்வு பயிற்சி முகாம் மற்றும் விலையில்லா கைத்தெளிப்பான்கள் வழங்கும் விழா, திருச்சி பழைய பால்பண்ணை அருகே உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது. கலெக்டர் சிவராசு தலைமை தாங்கினார். தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவன திருச்சி முதுநிலை மண்டல மேலாளர் சரவணன் வரவேற்று பேசினார்.

விழாவில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கலந்து கொண்டு திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர் ஆகிய 4 மாவட்ட விவசாயிகள் தலா 50 பேருக்கு என மொத்தம் 200 விவசாயிகளுக்கு விலையில்லா கைத்தெளிப்பான்களை வழங்கி பேசினார். அப்போது அவர் ேபசுகையில், தானிய இழப்பை தவிர்க்க விஞ்ஞான முறைப்படி தானியங்களை சேமிக்க மாநில சேமிப்பு கிடங்குகள் மூலமாக அரசு ஊக்குவிக்கிறது. தமிழ்நாட்டில் 58 இடங்களில் சேமிப்பு கிடங்கு உள்ளது. இந்த கிடங்குகள் அனைத்தும் விவசாயிகள் தானியங்களை சேமிக்கவும், மேலும் சந்தைகளில் தேவையின்போது எடுத்து சென்று விற்று பயன்பெறவும் உதவுகிறது, என்றார். முடிவில் திருச்சி கிடங்கு மேலாளர் சந்தோ‌‌ஷ் மரியசேவியர் நன்றி கூறினார்.

பின்னர் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருப்பது, விவசாயிகளும், பல்வேறு இயக்கங்களும் பாராட்டி வரும் சிறப்பான ஒரு திட்டம். ஆனால், தமிழக அரசின் எந்த திட்டமானாலும் முதல் எதிர்ப்பு குரல் கொடுப்பது மு.க.ஸ்டாலினின் அன்றாட பணிகளில் ஒன்றாக போய்விட்டது. அதுபோலத்தான் தற்போதும் கூறி இருக்கிறார். அவருக்கு என்னவென்று பதில் கொடுப்பது. பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலம் குறித்து உரியமுறையில் மத்திய அரசின் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டு, முதல்-அமைச்சர் எடுத்த நடவடிக்கை தொடரும்.

அ.தி.மு.க. அரசு விவசாயிகளின் நண்பராக தொடர்ந்து பணியாற்றி வருகிறது. அனைத்து தரப்பு விவசாயிகளும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் சிறப்பான ஒரு விவசாயி (எடப்பாடி பழனிசாமி) தலைமையில் நடந்து வரும் அரசு இது. விவசாயிகளின் பங்காளியாக, அவர்களின் உற்ற தோழனாகவும் அவர் திகழ்கிறார்.

திருச்சி ஒரு ஆன்மிக சுற்றுலா தலம். திருச்சி சிறுகனூர் புதிதாக அமைந்துள்ள தென்‌ஷீரடிக்கு, சென்னையில் இருந்து தேவையான போக்குவரத்து வசதிகளை சுற்றுலாத்துறை செய்து கொடுத்துள்ளது. திருச்சி முக்கொம்பு சுற்றுலா தலத்தில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே புதிய கதவணை கட்டும் பணி நடந்து வருகிறது. அப்பணிகள் முடியும் தருவாயில் அங்குள்ள சுற்றுலா தலம் மேம்படுத்தப்படும். திருச்சி-கரூர் புறவழிச்சாலையில் உள்ள முக்கொம்புவில் இருந்து குடமுருட்டி பாலம் வரை சாலை அகலப்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story