ரெயில் என்ஜின் வரும் நேரத்தில் கேட்டை உடைத்துக்கொண்டு தண்டவாளத்தில் நின்ற ஆட்டோ


ரெயில் என்ஜின் வரும் நேரத்தில் கேட்டை உடைத்துக்கொண்டு தண்டவாளத்தில் நின்ற ஆட்டோ
x
தினத்தந்தி 14 Feb 2020 4:15 AM IST (Updated: 14 Feb 2020 2:44 AM IST)
t-max-icont-min-icon

ரெயில் என்ஜின் வரும் நேரத்தில் கேட்டை உடைத்துக்கொண்டு தண்டவாளத்தில் ஆட்டோ நின்றதால் கீரனூரில் பரபரப்பு ஏற்பட்டது.

கீரனூர்,

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் குன்றாண்டார் கோவில் சாலையில் ரெயில்வே கேட் உள்ளது. இந்தநிலையில் மாலை 6.30 மணி அளவில் காரைக்குடியில் இருந்து ரெயில் என்ஜின் ஒன்று வந்து கொண்டிருந்தது.

இதற்காக இந்த ரெயில்வே கேட்டை மூட ரெயில்வே ஊழியர் சிக்னல் கொடுத்தார். பின்னர் ரெயில்வே கேட்டை அவர் மூடிக்கொண்டிருந்தார். அப்போது, அரியமங்கலத்தில் இருந்து ஒடுகன்பட்டி தர்காவுக்கு செல்வதற்காக பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு ஆட்டோ வந்தது.

ஆட்டோவை ஓட்டிவந்த டிரைவர் நிவாஸ்பாபு, ரெயில்வே கேட் முழுவதும் இறங்குவதற்குள் சென்றுவிடலாம் என்று ஆட்டோவை வேகமாக செலுத்தினார். முதல் கேட்டை கடந்து தண்டவாள பகுதிக்குள் சென்ற போது, அதற்கு அடுத்த கேட் கீழே வந்து விட்டது.

இதனால் ஆட்டோ ரெயில்வே கேட்டில் மோதியது. இதில் கேட் சேதமடைந்தது. அத்துடன் ரெயில்வே கேட்டை தாண்டி செல்லமுடியாமல் ஆட்டோ தண்டவாள பகுதியில் நின்றது.

இதனால் அந்த வழியாக வந்த ரெயில் என்ஜினுக்கு சிக்னல் கிடைக்கவில்லை. அதன்காரணமாக என்ஜின் டிரைவர் என்ஜினை நடுவழியில் நிறுத்தினார். இதுபற்றி தகவல் அறிந்த கீரனூர் ரெயில் நிலையத்தில் இருந்து ஊழியர்களும், கீரனூர் போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கேட் சேதமடைந்து இருந்ததால், கேட்டை திறக்க முடியவில்லை. இதனால் அந்த சாலையில் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இதற்கிடையே திருச்சியில் இருந்து காரைக்குடிக்கு புறப்பட்டு வந்த பயணிகள் ரெயில் கீரனூரிலேயே நிறுத்தப்பட்டது. ரெயில்வே ஊழியர்கள் நீண்ட நேரம் போராட்டத்துக்கு பிறகு ரெயில்வே கேட் திறக்கப்பட்டது.

பின்னர், தற்காலிகமாக சிக்னல் கொடுக்கப்பட்டு, சுமார் 1 மணி நேர தாமதத்துக்கு பின்னர் காரைக்குடி ரெயில் புறப்பட்டு சென்றது. மேலும் ரெயில்வே கேட்டில் மோதிய ஆட்டோவை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story