பெரம்பலூர் அருகே பரிதாபம்: கிணற்றில் குதித்து சிறுமி தற்கொலை துக்கம் தாங்காமல் வி‌‌ஷம் குடித்து தந்தையும் சாவு


பெரம்பலூர் அருகே பரிதாபம்: கிணற்றில் குதித்து சிறுமி தற்கொலை துக்கம் தாங்காமல் வி‌‌ஷம் குடித்து தந்தையும் சாவு
x
தினத்தந்தி 13 Feb 2020 10:45 PM GMT (Updated: 13 Feb 2020 9:20 PM GMT)

பெரம்பலூர் அருகே கிணற்றில் குதித்து சிறுமி தற்கொலை செய்துகொண்டார். துக்கம் தாங்காமல் தந்தையும் வி‌‌ஷம் குடித்து உயிரிழந்தார்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் அருகே உள்ள நொச்சியம் வடக்கு தெருவை சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது 48). இவரது மனைவி செல்லக்கண்ணு. இவர்களது மகள் மகாலட்சுமி (16). இவர் 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெறாததால் டுட்டோரியல் சென்டருக்கு சென்று படித்து வந்தார். இந்நிலையில் மகாலட்சுமி நேற்று தனது தந்தை பொன்னுசாமியுடன் தாத்தா வயலில் நின்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கும், பொன்னுசாமிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த பொன்னுசாமி மகளை அடிக்க துரத்தும்போது, மகாலட்சுமி பயந்து போய் அருகே இருந்த கிணற்றில் குதித்து விட்டாராம்.

பின்னர் அவர் தண்ணீரில் தத்தளித்தபடியே உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பொன்னுசாமி தனக்கு நீச்சல் தெரியாததால் மகளை காப்பாற்றுவதற்கு அந்த வழியாக சென்றவர்களை உதவிக்கு அழைத்தார். மேலும் இது குறித்து பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிணற்றுக்குள் இறங்கி மகாலட்சுமியை தீவிரமாக தேடினர். பெரம்பலூர் போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

தீயணைப்பு வீரர்கள் எவ்வளவோ முயற்சித்தும் மகாலட்சுமியை பிணமாகவே மீட்க முடிந்தது. இதையடுத்து மகாலட்சுமியின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தன் கண்முன்னே மகள் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதால், துக்கம் தாங்காமல் தந்தை பொன்னுசாமியும் வீட்டில் வி‌‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து அவரது உடலும் பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது. இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகள், தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது.

Next Story