விழுப்புரம் அருகே, தபால் நிலையத்தில் ரூ.4¾ லட்சம் கையாடல் செய்த அலுவலர் கைது


விழுப்புரம் அருகே, தபால் நிலையத்தில் ரூ.4¾ லட்சம் கையாடல் செய்த அலுவலர் கைது
x
தினத்தந்தி 14 Feb 2020 3:45 AM IST (Updated: 14 Feb 2020 5:45 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் அருகே தபால் நிலையத்தில் ரூ.4¾ லட்சம் கையாடல் செய்த அலுவலர் கைது செய்யப்பட்டார்.

விழுப்புரம், 

விழுப்புரம் அருகே கப்பூரில் உள்ள கிளை அஞ்சலகத்தில் கடந்த 27.9.2018 அன்று உயர் அதிகாரிகள் திடீர் தணிக்கை மேற்கொண்டனர். அப்போது அங்கு கிளை தபால் அலுவலராக பணியாற்றி வந்த செஞ்சி தாலுகா இல்லோடு சின்னகுளம் தெருவை சேர்ந்த நாகப்பன் மகன் அருள் (வயது 25) என்பவர் வாடிக்கையாளர்களின் சேமிப்பு கணக்கில் இருந்து ரூ.69 ஆயிரம் மற்றும் செல்வமகள் சேமிப்பு கணக்கில் இருந்து ரூ.2 லட்சத்து 47 ஆயிரத்து 925-ம், தொடர் வைப்பு கணக்கில் இருந்து ரூ.31 ஆயிரத்து 396-ம், கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு கணக்கில் இருந்து ரூ.17,100-ம் இதுபோன்று மொத்தம் ரூ.4 லட்சத்து 85 ஆயிரத்து 871-ஐ கையாடல் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து துறை ரீதியாக அருளை பணியிடை நீக்கம் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டனர். மேலும் அவரிடம் இருந்து ரூ.1 லட்சத்து 89 ஆயிரத்து 450-ஐ அதிகாரிகள் திரும்ப பெற்றனர். மீதமுள்ள ரூ.2 லட்சத்து 96 ஆயிரத்து 241 மற்றும் அதற்குரிய அபராத தொகையான ரூ.40 ஆயிரத்து 69 என மொத்தம் ரூ.3 லட்சத்து 36 ஆயிரத்து 490-ஐ அருள் திரும்ப செலுத்தாமல் ஏமாற்றி வந்துள்ளார்.

இதுகுறித்து உதவி கோட்ட கண்காணிப்பாளர் முருகன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாரிடம் புகார் மனு கொடுத்தார். இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்படி அருள் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலசிங்கம், குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.

இந்நிலையில் செஞ்சி அருகே செல்லப்பிரட்டை கிராமத்தில் அருள் இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் நேற்று போலீசார் அங்கு விரைந்து சென்று அருளை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை விழுப்புரம் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி வேடம்பட்டில் உள்ள மத்திய சிறையில் அடைத்தனர்.

Next Story