விழுப்புரத்தில், பெட்ரோல் பங்க் மேலாளர் கொலை வழக்கில் 5 பேர் கைது


விழுப்புரத்தில், பெட்ரோல் பங்க் மேலாளர் கொலை வழக்கில் 5 பேர் கைது
x
தினத்தந்தி 14 Feb 2020 4:00 AM IST (Updated: 14 Feb 2020 5:45 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் பெட்ரோல் பங்க் மேலாளர் கொலை வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

விழுப்புரம், 

விழுப்புரம் கம்பன் நகரில் உள்ள பெட்ரோல் பங்க்கில் மேலாளராக பணிபுரிந்தவர் சீனிவாசன்(வயது 55). இவரை கடந்த 4-ந் தேதி காலை 11.30 மணியளவில் ரவுடிகள் சிலர் நாட்டு வெடிகுண்டு வீசி, அரிவாளால் வெட்டி படுகொலை செய்து விட்டு கார், மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச்சென்றனர்.

இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கொலையாளிகளை பிடிக்க விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் கனகேசன், நந்தகோபால், சப்-இன்ஸ்பெக்டர்கள் சத்தியசீலன், பிரகா‌‌ஷ், சேதுராமன், அண்ணாத்துரை, பிரபு மற்றும் போலீசார் அடங்கிய 5 தனிப்படைகளை அமைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவிட்டார். தனிப்படையினர் பெட்ரோல் பங்க்கில் இருந்த சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை செய்ததில் கொலையாளி, விழுப்புரம் கிழக்கு சண்முகபுரம் காலனியை சேர்ந்த முகமதுஷெரீப் மகன் அசார் (30) மற்றும் அவரது கூட்டாளிகள் என்பது தெரியவந்தது.

இதனிடைய போலீசார் தங்களை நெருங்கி விட்டதை அறிந்த முக்கிய குற்றவாளிகளான அசார், திருச்சி கோர்ட்டிலும், விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலை மணிமேகலை தெருவை சேர்ந்த இருசப்பன் மகன் அப்பு என்ற கலையரசன் (25) என்பவர் தாம்பரம் கோர்ட்டிலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு சரணடைந்தனர்.

இருவரையும் கோர்ட்டு உத்தரவின்படி போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இந்த கொலையில் அசார், அப்பு ஆகியோருக்கு உடந்தையாக விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தை சேர்ந்த சீனிவாசன் மகன் தாமு என்கிற தாமோதரன் (25), ஆனாங்கூர் காலனியை சேர்ந்த முருகன் மகன் முத்துக்குமார் (24), கோணங்கிப்பாளையத்தை சேர்ந்த குமார் மகன் ரகு (24), விழுப்புரம் கல்லறை வீதியை சேர்ந்த ஆம்ஸ்ட்ராங் மகன் ஆரோக்கியராஜ் (23), விழுப்புரம் கணே‌‌ஷ் நகரை சேர்ந்த ராபர்ட்ஜோசப் மகன் சிரில் (23) உள்ளிட்ட சிலர் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து தாமு, முத்துக்குமார், ரகு, ஆரோக்கியராஜ், சிரில் ஆகிய 5 பேரையும் நேற்று போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த 4 கத்திகள் மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள், கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் 5 பேரையும் விழுப்புரம் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் ஏற்கனவே கோர்ட்டில் சரண் அடைந்த அப்பு என்கிற கலையரசனுக்கு நேற்றுடன் போலீஸ் காவல் முடிவடைந்ததையடுத்து அவரையும் இந்த வழக்கில் கைது செய்து விழுப்புரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அசாரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

இது தொடர்பாக விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், நிருபர்களிடம் கூறுகையில், பெட்ரோல் பங்க் மேலாளர் கொலை வழக்கில் ஏற்கனவே 2 பேர் சரண் அடைந்துள்ளனர். இன்று(அதாவது நேற்று) 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த சம்பவத்தில் கடலூர் சிறையில் இருக்கும் ஆயுள் தண்டனை கைதியான விழுப்புரம் கல்லூரி சாலையை சேர்ந்த பிரபல ரவுடி இருசப்பனுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. எனவே அவர் மீதும் வழக்குப்பதிவு செய்ய முடிவு செய்துள்ளோம். இதுதவிர மேலும் 3 பேரை வலைவீசி தேடி வருகிறோம். அவர்களும் விரைவில் பிடிபடுவார்கள். அசாரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.

Next Story