என் மீது குற்றச்சாட்டுகள் கூறுவதில் ஆச்சரியம் இல்லை கவர்னர் கிரண்பெடி கருத்து


என் மீது குற்றச்சாட்டுகள் கூறுவதில் ஆச்சரியம் இல்லை கவர்னர் கிரண்பெடி கருத்து
x
தினத்தந்தி 14 Feb 2020 12:54 AM GMT (Updated: 14 Feb 2020 12:54 AM GMT)

என் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஆச்சரியம் ஏதும் இல்லை என்று கவர்னர் கிரண்பெடி கூறியுள்ளார்.

புதுச்சேரி,

புதுவை சட்டசபையின் சிறப்பு கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இந்த கூட்டத்தின்போது முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் கடுமையான குற்றச்சாட்டுகளை கூறினார்கள்.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக கவர்னர் கிரண்பெடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

பொதுவாக என் மீதும் கவர்னர் அலுவலகம் மீதும் கூறப்படும் பலவிதமான குற்றச்சாட்டுகள் குறித்து எனக்கு ஆச்சரியம் ஏதும் இல்லை. குற்றச்சாட்டுகளில் சொற்கள் மட்டுமே மாறுகிறது. பயன்பாட்டிற்கு போக சொற்கள் மீதமிருக்கும் என்று நம்புகிறேன்.

இந்த குற்றச்சாட்டுகள் தொடர்ந்து தெரிவிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கடன் வாங்குவதை தடுப்பது, ரவுடியிசம், நிலஅபகரிப்புகளை தடுப்பது, கூட்டுறவு விதிகளை மீறி நடத்தப்படும் சங்கங்கள் போன்ற பல விஷயங்கள் விவாதத்துக்கு உள்ளன.

குறுகிய கால ஆதாயத்தை மட்டுமே பார்த்தால் கண்டிப்பாக சட்ட விளைவுகளை சந்திக்க வேண்டியதிருக்கும். நிதி தொடர்பான விஷயங்களில் விதிகளை மீறி செயல்பட்ட அரசு ஊழியர்களுக்கு ஓய்வுக்கு பின்னரும் பாதிப்பை தருகிறது.

சட்ட விதிகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்யவே அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றனர். என்னைப்போல நியமிக்கப்பட்டவர்கள் குறுகிய நலன்களுக்காகவும், எளிதான வழிகளை கடைபிடிக்கவும் இங்கு வரவில்லை. சரியான செயல்முறைக்கு கட்டுப்பட்டு நடப்பதுடன் வெளிப்படையாக செயல்படுவதுதான் மிகப்பெரிய நன்மையை தரும்.

இவ்வாறு அந்த பதிவில் கவர்னர் கிரண்பெடி கூறியுள்ளார்.

Next Story