குழந்தை திருமணமே வரதட்சணை கொடுமைக்கு காரணம் - விழிப்புணர்வு முகாமில் கலெக்டர் திவ்யதர்ஷினி பேச்சு
வன்கொடுமை, வரதட்சணை கொடுமைகளுக்கு குழந்தை திருமணமே காரணம் என்று விழிப்புணர்வு முகாமில் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி கூறினார்.
சிப்காட் (ராணிப்பேட்டை),
அம்மூரை அடுத்த நரசிங்கபுரம் பைரா காலனியில் சைல்டு லைன் அமைப்பு சார்பில் குழந்தை திருமணம் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்ற பின் நான் சந்தோஷமில்லாமல் கலந்துகொள்கிற நிகழ்ச்சி இது. கடந்த ஜனவரி மாதம் இந்த பகுதியில் ஒரே நாளில் நடைபெற இருந்த 3 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. 14 வயதிற்கு கீழ் வேலை செய்தால் அவர்கள் குழந்தை தொழிலாளர்களாக கருதப்படுவர்.
திருமணத்தை பொறுத்தவரையில் பெண்ணுக்கு 18 வயதிற்கு கீழும், ஆணுக்கு 21 வயதிற்கு கீழும் திருமணம் செய்தால் அது குழந்தை திருமணம். திருமணம் என்பது இருதரப்பை சார்ந்தது கிடையாது. அது சமூகம் சார்ந்தது. குழந்தை திருமணம் நடைபெற்றால் அதுபற்றி 1098 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
வன்கொடுமை, வரதட்சணை கொடுமை போன்றவைகளுக்கு ஆரம்பமே குழந்தை திருமணம் தான் காரணம். கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் பெரும்பாலும் குழந்தை திருமணம் செய்து கொண்டவர்கள் தான். இந்த பகுதியில் குழந்தை திருமணமே நடக்கவில்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும். குழந்தைகளை நன்கு படிக்க வையுங்கள். இந்த பகுதிக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அரசு செய்து தரும்.
இவ்வாறு கலெக்டர் திவ்யதர்ஷினி பேசினார்.
முன்னதாக சைல்டு லைன் அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தேவேந்திரன் வரவேற்றார். முதன்மை மேலாளர் மோகனவேல் முன்னிலை வகித்தார். முகாமில் மாவட்ட சமூக நல அலுவலர் முருகேஸ்வரி, வாலாஜா தாசில்தார் பாலாஜி, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் நிஷாந்தினி, குழந்தைகள் நலக்குழு தலைவர் சிவகலைவாணன், அம்மூர் பேரூராட்சி செயல் அலுவலர் ரேவதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
முகாமில் சைல்டு லைன் பெயர் பலகையை கலெக்டர் திறந்து வைத்தார். மேலும் துண்டு பிரசுரங்களும், சுவரொட்டிகளும் வெளியிடப்பட்டன.
அதைத் தொடர்ந்து குழந்தை திருமணம் தடுப்பு விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது. பின்னர் கலெக்டர் திவ்யதர்ஷினி மரக்கன்றுகளை நட்டு வைத்தார். முடிவில் சைல்டு லைன் அமைப்பின் உறுப்பினர் நாகப்பன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story