காதல் தகராறில், 3 ஆயிரம் அடி பள்ளத்தில் தள்ளி சிறுவன் கொலை: கேரள வாலிபர்கள் 3 பேருக்கு ஆயுள் தண்டனை தேனி கோர்ட்டு தீர்ப்பு


காதல் தகராறில், 3 ஆயிரம் அடி பள்ளத்தில் தள்ளி சிறுவன் கொலை: கேரள வாலிபர்கள் 3 பேருக்கு ஆயுள் தண்டனை தேனி கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 14 Feb 2020 11:00 PM GMT (Updated: 14 Feb 2020 12:55 PM GMT)

காதல் தகராறில் 3 ஆயிரம் அடி பள்ளத்தில் தள்ளி சிறுவனை கொலை செய்த கேரள வாலிபர்கள் 3 பேருக்கு ஆயுள் தண்டனை.

தேனி,

காதல் தகராறில் 3 ஆயிரம் அடி பள்ளத்தில் தள்ளி சிறுவனை கொலை செய்த கேரள வாலிபர்கள் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தேனி மாவட்ட கூடுதல் செசன்சு கோர்ட்டில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

மாயமான சிறுவன் 

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் அணைக்கரையை சேர்ந்தவர் வீரணன் (வயது 57). கூலித்தொழிலாளி. இவரது மனைவி பவுன்தாய். இவர்களுக்கு ராஜேஸ்வரி, கவுசல்யா என 2 மகள்களும், ராஜேஷ்கண்ணன் (17), ரஞ்சித் என 2 மகன்களும் இருந்தனர். கடந்த 2014–ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 3–ந் தேதி ராஜேஷ்கண்ணன், குமுளிக்கு சென்று வருவதாக கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியே சென்றார்.

10 நாட்கள் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் அவரை தேடினர். அப்போது அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ஜோன் (26) மற்றும் சிலர், ராஜேஷ்கண்ணனை ஒரு ஆட்டோவில் அழைத்துச் சென்றதாக சிலர் கூறினர். இதையடுத்து தனது மகனை காணவில்லை என்றும், ஜோன் உள்ளிட்ட சிலர் மீது சந்தேகம் உள்ளதாகவும் வண்டன்மேடு போலீஸ் நிலையத்தில் வீரணன் புகார் செய்தார்.

அதன்பேரில் சிறுவனை காணவில்லை என்று போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். ஜோன் உள்பட சிலரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள், ராஜேஷ்கண்ணனுடன் வல்லியபாறை பகுதிக்கு சென்றதாகவும், அவர் தனது மாமா வீட்டுக்கு செல்வதாக கூறிச் சென்று விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

பிணமாக மீட்பு 

இந்தநிலையில், கம்பம் வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து சென்றபோது, சுரங்கனார் நீர்வீழ்ச்சிக்கு அருகில் வல்லியபாறை பள்ளம் என்ற இடத்தில் 16–8–2014 அன்று தலை சிதைந்த நிலையில் ஒரு பிணம் கிடந்ததை பார்த்தனர். தலை சிதைந்து இருந்ததால் அவரை அடையாளம் காணமுடியவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்ததும் லோயர்கேம்ப் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த பிணம் மீட்கப்பட்டது குறித்து, தனது மகனை காணவில்லை என்று புகார் அளித்த வீரணனுக்கு போலீசார் தகவல் கொடுத்தனர். அவர் வந்து பிணத்தை பார்த்துவிட்டு, அதில் இருந்த ஆடைகள் மற்றும் பிணத்தில் கையில் கட்டப்பட்டு இருந்த கயிறு ஆகியவற்றை வைத்து அது தனது மகன் தான் என அடையாளம் காட்டினார். இதையடுத்து இது சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

3 பேர் கைது 

பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக ஜோன், அவருடைய நண்பர்களான இடுக்கி மாவட்டம் செல்லார்கோவில்மெட்டு பகுதியை சேர்ந்த வினிஷ் (28), உடையகிரிமேட்டைச் சேர்ந்த சந்தோஷ் (25) ஆகிய 3 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.

இதையடுத்து அவர்களிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள், 3 பேரும் சேர்ந்து ராஜேஷ்கண்ணனை சுரங்கனார் நீர்வீழ்ச்சி அமைந்துள்ள மலை உச்சியில் இருந்து சுமார் 3 ஆயிரம் அடி பள்ளத்தில் தள்ளிவிட்டு கொலை செய்தது தெரியவந்தது.

கொலைக்கான காரணம் குறித்து அவர்களிடம் விசாரணை செய்தபோது, ராஜேஷ்கண்ணனின் அக்காள் ராஜேஸ்வரியை ஜோன் காதலித்துள்ளார். அதனால் அவரை, ராஜேஷ்கண்ணன் கண்டித்துள்ளார். இதன்காரணமாக அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அவர் தனது நண்பரும் ஆட்டோ டிரைவருமான வினிஷ், சந்தோஷ் ஆகியோருடன் சேர்ந்து மலை உச்சியில் இருந்து ராஜேஷ்கண்ணனை தள்ளிவிட்டு கொலை செய்தது அம்பலமானது. இதையடுத்து 3 பேரையும் லோயர்கேம்ப் போலீசார் கைது செய்தனர்.

ஆயுள் தண்டனை 

இந்த வழக்கு தேனி மாவட்ட கூடுதல் செசன்சு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கின் இறுதி விசாரணை முடிந்ததை தொடர்ந்து நீதிபதி அப்துல்காதர் நேற்று தீர்ப்பு கூறினார்.

கொலை வழக்கில் ஜோன், வினிஷ், சந்தோஷ் ஆகிய 3 பேருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் பாதுகாப்பாக அழைத்துச் சென்று மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

Next Story