திங்கள்நகர் பஸ் நிலையப்பணி விரைந்து முடிக்க வியாபாரிகள் கோரிக்கை
திங்கள்நகர் பஸ் நிலையப்பணி ஆமை வேகத்தில் நடக்கிறது. அதை விரைந்து முடிக்க வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திக்கணங்கோடு,
குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய பகுதிகளில் திங்கள் சந்தையும் ஒன்றாகும். இங்கு ஆடு, மாடு, கோழி உள்பட அனைத்து பொருட்களும் விற்கப்படும் சந்தை திங்கட்கிழமைகளில் நடைபெறுவதால் திங்கள் சந்தை என்ற பெயர் வந்தது. தலக்குளம் பஞ்சாயத்துக்குள் இப்பகுதி இருந்தது.
1962–ல் அப்போதைய தலக்குளம் பஞ்சாயத்து தலைவர் ஆ.பாலையா முயற்சியால், திங்கள் சந்தை பஸ் நிலையம் திறக்கப்பட்டது. இதை அப்போதைய முதல்–அமைச்சர் காமராஜர் திறந்து வைத்தார் பின்னர் திங்கள் சந்தை என்ற பெயர் திங்கள் நகர் என்று மாறியது. அதைத்தொடர்ந்து திங்கள்நகர் தேர்வு நிலை பேரூராட்சியானது.
பஸ் நிலையத்துக்கு பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்தது. அதைத் தொடர்ந்து, புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதுபற்றி பிரின்ஸ் எம்.எல்.ஏ. தமிழக சட்டசபையில் பேசினார். அதைத்தொடர்ந்து ரூ.5½ கோடியில் புதிய பஸ் நிலையம் அமைக்க தமிழக அரசு அனுமதி அளித்தது.
அதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு (2019) மார்ச் மாதம் புதிய பஸ் நிலையப்பணி தொடங்கியது. அப்போது 12 மாதங்களுக்குள் பஸ் நிலையம் கட்டி முடிக்கப்படும் என்று கூறப்பட்டது. அதன்படி இந்த மாதத்துக்குள் பணி முடிய வேண்டும். ஆனால் பஸ் நிலையப்பணி ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. தற்போது 90 கடைகள் கட்டப்பட்டு, பஸ் நிலைய தரைத்தளம் சமன் படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
மேலும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசி கொடை விழா மார்ச் 1–ந்தேதி தொடங்குகிறது. அதற்கு குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் வருவார்கள். அவ்வாறு வரும் மக்களில் பெரும் பாலானவர்கள் திங்கள்நகர் வந்து, மண்டைக்காடுக்கு பஸ் ஏறி செல்வார்கள்.
திங்கள் நகரில் புதிய பஸ் நிலையப்பணி நடைபெறுவதால், தற்காலிக பஸ் நிலையம் பிலாக்கோடு ஜங்ஷனில் செயல்பட்டு வருகிறது. இங்கு பஸ்சில் பயணிகள் ஏறி, இறங்கி செல்வதே சாதனையாக உள்ளது. காலை, மாலை நேரங்களில் பஸ் நிலையம் என்று நம்ப முடியாத அளவுக்கு, தனியார் வாகனங்கள் ஒன்றோடு, ஒன்று உரசியபடி செல்கின்றன. போக்குவரத்து போலீசார் எந்த நேரமும் பணியில் இருந்தாலும், அவர்கள் அறிவுறுத்தலை, இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் கண்டு கொள்வதே இல்லை. இதனால் அடிக்கடி விபத்துகள் நடந்து வருகிறது. ஒரு வழிப்பாதை என்று அறிவிக்கப்பட்டு, வாகனம் செல்ல தடை விதிக்கப்பட்ட வழியாக இரு சக்கர வாகனங்கள் செல்வதே விபத்துக்கு காரணம் ஆகும்.
எனவே திங்கள் நகர் பஸ் நிலையப்பணியை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Related Tags :
Next Story