இறுதி வாக்காளர் பட்டியலில் 20, 30, 502 வாக்காளர்கள்; ஆண்களை விட பெண்கள் அதிகம்


இறுதி வாக்காளர் பட்டியலில் 20, 30, 502 வாக்காளர்கள்; ஆண்களை விட பெண்கள் அதிகம்
x
தினத்தந்தி 14 Feb 2020 10:30 PM GMT (Updated: 14 Feb 2020 2:56 PM GMT)

திருவண்ணாமலை மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் 20 லட்சத்து 30 ஆயிரத்து 502 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

திருவண்ணாமலை, 

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் 2020–ம் ஆண்டுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி தலைமை தாங்கி இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். இதில் திருவண்ணாமலை வருவாய் கோட்ட அலுவலர் ஸ்ரீதேவி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ஜானகி மற்றும் அரசு அலுவலர்கள், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின்போது கண்பார்வையற்ற 5 வாக்காளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய பிரெய்லி வாக்காளர் அடையாள அட்டையை மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார். மொத்தம் 1,845 கண் பார்வையற்ற வாக்காளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய பிரெயிலி வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

பின்னர் மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி கூறுகையில், ‘‘திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளில் கடந்த 23.12.2019 முதல் 22.01.2020 வரை பெறப்பட்ட படிவங்கள் 6, 7, 8 மற்றும் 8 ஏ மீது வாக்காளர் பதிவு அலுவலர்களால் பரிசீலனை செய்யப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இறுதி வாக்காளர் பட்டியலில் புதிதாக 41 ஆயிரத்து 115 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர். மேலும், இறந்தோர், இடம் பெயர்ந்தோர் மற்றும் இருமுறை பதிவு என 2,149 வாக்காளார்கள் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

 திருவண்ணாமலை மாவட்டத்தில் வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலில் மொத்தம் 20 லட்சத்து 30 ஆயிரத்து 502 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 9 லட்சத்து 97 ஆயிரத்து 745 ஆண் வாக்காளர்களும், 10 லட்சத்து 32 ஆயிரத்து 623 பெண் வாக்காளர்களும், 134 இதர வாக்காளர்களும் உள்ளனர். இதன் மூலம் பெண் வாக்காளர்களே மாவட்டத்தில் அதிகம் உள்ளனர்.

வாக்காளர் பட்டியல் அனைத்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், தாலுகா அலுவலகம், நகராட்சி அலுவலகம் மற்றும் வாக்குச் சாவடி அலுவலர் அலுவலகங்களில் வாக்காளர்கள் பார்வைக்கு வைக்கப்படும். மேலும் https:/www.elections.tn.gov.in/ என்ற இணையதளத்திலும் வாக்காளர் பட்டியலை காணலாம். தற்போது வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலில் வாக்காளர்கள் அனைவரும் தாங்கள் மற்றும் தங்கள் குடும்பத்தினர்களின் பெயரை சரிபார்த்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story