பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு மீண்டும் தண்ணீர் திறப்பு 453 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது
பூண்டி ஏரியிலிருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு மீண்டும் தண்ணீர் திறந்து விடப்பட்டது. தற்போது வினாடிக்கு 453 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
செங்குன்றம்,
ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையிலிருந்து கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி கடந்த செப்டம்பர் மாதம் 28-ந் தேதி முதல் பூண்டி ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
முதலில் வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி வீதம் பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.
கண்டலேறு அணையிலிருந்து தற்போது வினாடிக்கு 3,200 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நதி நீர் வினாடிக்கு 481 கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது. இவ்வாறு திறந்து விடப்படும் கிருஷ்ணா நதிநீர் பூண்டி ஏரியில் சேமித்து வைக்கப்படும்.
இதையடுத்து, தேவைப்படும் போது பூண்டி ஏரியிலிருந்து புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் திறந்து விடுவது வழக்கம். அதன்படி, கடந்த நவம்பர் மாதம் 1-ந் தேதி பூண்டி ஏரியிலிருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.
செம்பரம்பாக்கம் ஏரி
அதன் பின்னர் 30-ந் தேதி தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. ஆனாலும் புழல் ஏரிக்கு தொடர்ந்து திறந்து விடப்பட்டு இருந்த நிலையில், நேற்று புழல் ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. ஆனால் பூண்டி ஏரியிலிருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
பூண்டி ஏரியின் உயரம் 35 அடியாகும். 3,231 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். நேற்று காலை 6 மணி வரை ஏரியின் நீர் மட்டம் 30.43 அடியாக பதிவானது. 1,842 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.
பூண்டி ஏரியிலிருந்து தற்போது செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 453 கனஅடி தண்ணீரும், சென்னை குடிநீர் வாரியத்துக்கு வினாடிக்கு 15 கனஅடி தண்ணீரும் திறந்து விடப்படுகிறது.
Related Tags :
Next Story