காதலர் தினம் மாமல்லபுரத்தில் காதல் ஜோடிகள் திரண்டனர்


காதலர் தினம் மாமல்லபுரத்தில் காதல் ஜோடிகள் திரண்டனர்
x
தினத்தந்தி 14 Feb 2020 10:30 PM GMT (Updated: 14 Feb 2020 5:50 PM GMT)

காதலர் தினத்தையொட்டி மாமல்லபுரத்தில் காதல் ஜோடிகள் திரண்டனர்.

மாமல்லபுரம்,

காதலர்களுக்காக போராடிய கிறிஸ்தவ பாதிரியார் வாலன்டைன் நினைவாக, உலகம் முழுவதும் ஆண்டு தோறும் பிப்ரவரி மாதம் 14-ந் தேதியை, காதலர் தினமாக கொண்டாடி வருகின்றனர்.

சர்வதேச சுற்றுலா தலமான மாமல்லபுரத்தில் கடந்த ஆண்டை போன்று இந்த ஆண்டும் நேற்று ஏராளமான காதல் ஜோடிகள் வருகை தந்து காதலர் தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடி களித்தனர். காலை 11 மணி முதல் சாரை, சாரையாக காதல் ஜோடிகள் மோட்டார் சைக்கிளிலும், பஸ்சிலும் வரத்தொடங்கினார்கள். சென்னை, தாம்பரம், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, மதுராந்தகம் மற்றும் பல இடங்களில் இருந்து ஏராளமான காதல் ஜோடிகள் வந்தனர். அவர்கள் முக்கிய புராதன சின்னங்களை சுற்றி பார்த்து மகிழ்ந்தனர்.

கடற்கரை கோவில், ஐந்து ரதம் பகுதியில் உள்ள கடைகளில் காதலர் தினத்தையொட்டி காதலர்கள் தங்கள் மனம் கவர்ந்த பரிசுப்பொருட்களை காதலிக்கு வாங்கி கொடுத்தனர். பல காதலர்கள் பூக்கடையில் ரோஜா மலர் வாங்கி தன்னுடைய காதலிக்கு கொடுத்து மகிழ்ந்தனர்.

சில பெண்கள் தன்னை யாரும் அடையாளம் கண்டுகொள்ளாத வகையில் சுடிதார் துப்பட்டாவால் முகத்தை மூடிக்கொண்டு காதலனுடன் வலம் வந்தனர். ஜோடிகள் சிலர் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர். சில காதல் ஜோடிகள் கலங்கரை விளக்கத்தில் உள்ள மலைக்குன்றில் காதல் சின்னங்களையும், தங்கள் பெயர்களையும் பெயிண்டால் எழுதிவிட்டு சென்றனர். காதலர் தினத்தால் நேற்று மாமல்லபுரம் களைகட்டியது.

குறிப்பாக மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தை சோதனை சாவடி மற்றும் மாமல்லபுரம் புறவழிச்சாலையில் உள்ள பல்லவன் சிலை சோதனை சாவடி அருகில் போக்குவரத்து காவலர்கள் சிலர் கூட்டம், கூட்டமாக மோட்டார் சைக்கிளில் வந்த காதல் ஜோடிகளை மடக்கி, அவர்கள் ஹெல்மெட் அணிந்து ஆவணங்கள் சரியாக வைத்திருந்தபோதிலும் மிரட்டி பணம் பறித்த சம்பவங்களும் நேற்று அரங்கேறியது. இதனால் பல ஜோடிகள் பணத்தை கொடுத்துவிட்டு மனம் நொந்தபடியே அங்கிருந்து வருத்தத்துடன் சென்றதை காண முடிந்தது.

குறிப்பாக கிழக்கு கடற்கரை சாலை வழியாக வரும் காதல் ஜோடிகளை மிரட்டி பணம் பறிப்பதிலேயே ரோந்து போலீசாரும், போக்குவரத்து போலீசாரும் தொடர்ந்து வழிப்பறி நபர்கள் போல் செயல்பட்டு வருவதை சமூக ஆர்வலர்கள் பலர் கண்டித்துள்ளனர்.

Next Story