நாகை அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்த சில மணி நேரத்தில் இளம்பெண் சாவு - டாக்டர்களின் அலட்சியமே காரணம் எனக்கூறி உறவினர்கள் சாலை மறியல்


நாகை அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்த சில மணி நேரத்தில் இளம்பெண் சாவு - டாக்டர்களின் அலட்சியமே காரணம் எனக்கூறி உறவினர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 14 Feb 2020 10:30 PM GMT (Updated: 14 Feb 2020 6:43 PM GMT)

நாகை அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்த சில மணி நேரத்தில் இளம் பெண் இறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு டாக்டர்களின் அலட்சிய போக்கே காரணம் எனக்கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்,

நாகை வெளிப்பாளையம் பச்சைபிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சரவணன். இவருடைய மனைவி பெரியநாயகி(வயது 19). நிறைமாத கர்ப்பிணியான பெரியநாயகியை பிரசவத்திற்காக நாகை அரசு தலைமை மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்த்தனர். நேற்று மதியம் பெரியநாயகிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

இந்த நிலையில் திடீரென பெரியநாயகிக்கு ரத்தபோக்கு அதிகமாகி மூச்சுத்திணறல் ஏற்பட்டது. டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் பெரியநாயகி சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார்.

பெரியநாயகி இறந்த செய்தி கேட்டு அவரது உறவினர்கள் நாகை அரசு தலைமை மருத்துவமனை முன்பு கூடினர். பின்னர் அவர்கள் மருத்துவமனை அதிகாரி அறையை முற்றுகையிட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வெளிப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மருத்துவமனை அதிகாரி அறையை முற்றுகையிட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் அவர்கள் சமாதானம் அடையாததால் அவர்கள் மருத்துவமனை முன்பு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது டாக்டர்களின் அலட்சிய போக்கு காரணமாகத்தான் பெரியநாயகி இறந்தார். அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை மறியல் போராட்டத்தை கைவிட மாட்டோம் என பிறந்த குழந்தையை கையில் ஏந்தியபடி தொடர்ந்து கோ‌‌ஷங்கள் எழுப்பிக் கொண்டிருந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த நாகை டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சம்பந்தப்பட்ட டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்வதாக கூறினர்.

இதையடுத்து உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நாகையில் குழந்தை பிறந்த சில மணி நேரத்திலேயே இளம் பெண் இறந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து மருத்துவ அதிகாரி காதர் கூறுகையில், நாகை அரசு தலைமை மருத்துவமனை கடந்த 4 ஆண்டு காலமாக பிரசவத்தின் போது மரணம் இல்லாமல் இருந்துள்ளது. டாக்டர்கள் கவனக்குறைவின் காரணமாக தாய் இறக்கவில்லை. குழந்தை பிறந்தவுடன் தாய் சிறிது நேரம் உடல் நலத்துடன்தான் இருந்தார். பிரசவ அறையில் இருக்கும்போது தாய்க்கு திடீரென மூச்சுதிணறல் ஏற்பட்டுள்ளது. பணியில் இருந்த டாக்டர் குழுவினர் பெரியநாயகிக்கு சிகிச்சை அளித்தனர். ஆனால் நுரையீரல் அடைப்பு ஏற்பட்டதால் தாய் இறந்து இருக்கலாம். எனவே பெரியநாயகியின் உடலை அவரது உறவினர்கள் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டால், அவரது உடல் பிரேத பரிசோதனை செய்து தரப்படும். அதன் அடிப்படையில் டாக்டர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படும் என்றார்.

Next Story