பழையனூரில், அரசு நெல் கொள்முதல் நிலையத்திற்கு கட்டிடம் கட்ட வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை


பழையனூரில், அரசு நெல் கொள்முதல் நிலையத்திற்கு கட்டிடம் கட்ட வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 14 Feb 2020 10:00 PM GMT (Updated: 14 Feb 2020 7:18 PM GMT)

பழையனூரில் அரசு நெல் கொள்முதல் நிலையத்திற்கு கட்டிடம் கட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கூத்தாநல்லூர்,

கூத்தாநல்லூர் அருகே உள்ள பழையனூரில் கிராம நிர்வாக அலுவலகம் எதிரில் அரசு நெல் கொள்முதல் நிலையம் உள்ளது. இந்த கொள்முதல் நிலையத்துக்கு கட்டிடம் இல்லாததால் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளை கட்டிடம் இல்லாததால் வெட்ட வெளியில் அடுக்கி வைத்துள்ளதாகவும், இதனால் பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர். இதனால் பழையனூரில் அரசு நெல் கொள்முதல் நிலையத்திற்கு கட்டிடம் கட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், பழையனூர், சாத்தனூர், கானூர், வடகட்டளை கோம்பூர், நாகங்குடி மற்றும் சுற்றுப்புற பகுதியில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் சாகுபடி பணிகளை செய்து வருகிறோம். தற்போது சம்பா அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளை அரசு நெல் கொள்முதல் நிலைய கட்டிடம் இல்லாததால் வெட்ட வெளியிலேயே அடுக்கி வைத்து இரவு, பகலாக பாதுகாத்து வருகின்றோம்.

திடீரென மழை பெய்தால் நெல் மூட்டைகளை தார்பாய் கொண்டு மூடுவதிலும் பல்வேறு சிரமங்கள் உள்ளது. சில தார்பாய்கள் சேதமடைந்து நெல் மூட்டைகளில் ஈரப்பதம் ஏற்படுகிறது. இதனால் பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதுடன் கடும் வெயிலில் நின்றபடி நெல் மூட்டைகளை எடைபோட்டு கொடுக்க வேண்டிய நிலையும் உள்ளது.

எனவே, விவசாயிகளின் நலன் கருதி பழையனூரில் நெல் கொள்முதல் நிலைய கட்டிடம் கட்டி தர வேண்டும். மேலும் வடபாதிமங்கலம், புனவாசலில் கட்டி முடிக்கப்பட்ட அரசு நெல் கொள்முதல் நிலைய கட்டிடத்தை பயன்பாட்டிற்கு விட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். 

Next Story