30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 14 Feb 2020 10:30 PM GMT (Updated: 14 Feb 2020 7:54 PM GMT)

30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

விழுப்புரம்,

விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில் நேற்று மாலை தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில தலைவர் பி.கே.சிவக்குமார் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் வெ.சிவக்குமார் வரவேற்றார். சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

8-வது ஊதியக்குழு நிலுவைத்தொகையை உடனே வழங்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடை முறைப்படுத்த வேண்டும், ஊதியக்குழு முரண்பாடுகளை அனைத்துநிலை பணியாளர்களுக்கும் களைதல் வேண்டும், டாஸ்மாக் பணியாளர்களை பணிநிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், சாலை பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக அறிவித்து அதற்குரிய அனைத்து சலுகைகளையும் வழங்க வேண்டும், உள்ளாட்சி நிர்வாகத்தில் பணியாற்றக்கூடிய துப்புரவு பணியாளர்கள், தூய்மை காவலர்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர்களுக்கு முறையாக ஊதியம், உபகரணங்களை வழங்க வேண்டும் என்பன உள்பட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் மாநில பொதுச்செயலாளர் கோபிநாத், பொருளாளர் ‌ஷாகுல்அமீது, முன்னாள் பொதுச்செயலாளர் குப்புசாமி, மாநில துணைத்தலைவர் சரவணன், பிரசார செயலாளர் சுகமதி, நியாய விலைக்கடை பணியாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் ஜெயச்சந்திரராஜா, தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்க மாநில பொருளாளர் ஜெய்கணே‌‌ஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் ஊராட்சி ஒன்றிய களப்பணியாளர்கள் சங்க மாநில தலைவர் வீரப்பன் நன்றி கூறினார்.

Next Story