இறுதி பட்டியல் வெளியீடு: மாவட்டத்தில் 11 லட்சத்து 61 ஆயிரத்து 744 வாக்காளர்கள்


இறுதி பட்டியல் வெளியீடு: மாவட்டத்தில் 11 லட்சத்து 61 ஆயிரத்து 744 வாக்காளர்கள்
x
தினத்தந்தி 14 Feb 2020 10:30 PM GMT (Updated: 14 Feb 2020 9:10 PM GMT)

மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி மாவட்டத்தில் 11 லட்சத்து 61 ஆயிரத்து 744 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்களை விட பெண்கள் 16 ஆயிரத்து 438 பேர் அதிகம் உள்ளனர்.

சிவகங்கை,

மாவட்டத்தின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீட்டு நிகழ்ச்சி கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையிலும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையிலும் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் லதா, வருவாய் கோட்டாட்சியர்கள் செல்வகுமாரி, சங்கரநாராயணன், தனித்துணை ஆட்சியர்கள் சுப்புராஜ், சிந்து மற்றும் அரசு அதிகாரிகளும், அ.தி.மு.க. சார்பில் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சந்திரன், நகர் செயலாளர் ஆனந்தன், தி.மு.க. சார்பில் மாவட்ட துணை செயலாளர்கள் சேங்கைமாறன், மணிமுத்து, பா.ஜ.க. சார்பில் சொக்கலிங்கம், காங்கிரஸ் கட்சி சார்பில் கணேசன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் முத்துராமலிங்கம் மற்றும் கண்ணன், தே.மு.தி.க. சார்பில் ரமேஷ், தேசிய வாத காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் பெரோஸ் காந்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் வெளியிட, அதை அரசியல் கட்சியினர் பெற்றுக்கொண்டனர். சிவகங்கை மாவட்டத்தில், காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை மற்றும் மானாமதுரை என 4 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் காரைக்குடி தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 52 ஆயிரத்து 345 பேரும், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 56 ஆயிரத்து 580 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 44 பேர் என மொத்தம் 3 லட்சத்து 8 ஆயிரத்து 969 வாக்காளர்கள் உள்ளனர்.

திருப்பத்தூர் தொகுதியில் ஆண்கள் 1 லட்சத்து 42 ஆயிரத்து 238 பேர், பெண்கள் 1 லட்சத்து 46 ஆயிரத்து 884 பேர், மூன்றாம் பாலினத்தவர் 11 என மொத்தம் 2 லட்சத்து 89 ஆயிரத்து 133 வாக்காளர்கள் உள்ளனர்.

சிவகங்கை தொகுதியில் ஆண்கள் 1 லட்சத்து 44 ஆயிரத்து 158 பேர், பெண்கள் 1 லட்சத்து 48 ஆயிரத்து 546 பேர் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 2 பேர் என மொத்தம் 2 லட்சத்து 92 ஆயிரத்து 706 வாக்காளர்கள் உள்ளனர்.

மானாமதுரை தொகுதியில் ஆண்கள் 1 லட்சத்து 33 ஆயிரத்து 881 பேரும், பெண்கள் 1 லட்சத்து 37 ஆயிரத்து 50 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 5 பேரும் என மொத்தம் 2 லட்சத்து 70 ஆயிரத்து 936 பேர் உள்ளனர். மாவட்டத்தில் மொத்தம் 11 லட்சத்து 61 ஆயிரத்து 744 வாக்காளர்கள் உள்ளனர். அதில் 5 லட்சத்து 72 ஆயிரத்து 622 பேர் ஆண் வாக்காளர்கள், 5 லட்சத்து 89 ஆயிரத்து 60 பெண் வாக்காளர்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 62 பேர். ஆண் வாக்காளர்களை விட 16 ஆயிரத்து 438 பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர். மேலும் காரைக்குடி தொகுதியில் 345 வாக்குச் சாவடிகளும், திருப்பத்தூர் தொகுதியில் 334 வாக்குச் சாவடிகளும், சிவகங்கை தொகுதியில் 348 வாக்குச் சாவடிகளும் மானாமதுரை தொகுதியில் 321 வாக்குச் சாவடிகளும் உள்ளன. 

Next Story