நெல்லை அண்ணா பல்கலைக்கழகத்தில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு கருத்தரங்கம் டீன் சுரேஷ்குமார் தொடங்கி வைத்தார்


நெல்லை அண்ணா பல்கலைக்கழகத்தில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு கருத்தரங்கம்  டீன் சுரேஷ்குமார் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 14 Feb 2020 9:30 PM GMT (Updated: 14 Feb 2020 9:52 PM GMT)

நெல்லை அண்ணா பல்கலைக்கழகத்தில் கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணவு கருத்தரங்கத்தை நெல்லை மண்டல டீன் சுரேஷ்குமார் தொடங்கி வைத்தார்.

நெல்லை, 

நெல்லை அண்ணா பல்கலைக்கழகத்தில் கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணவு கருத்தரங்கத்தை நெல்லை மண்டல டீன் சுரேஷ்குமார் தொடங்கி வைத்தார்.

கொரோனா வைரஸ் கருத்தரங்கம் 

நெல்லை அண்ணா பல்கலைக்கழக மண்டல அலுவலக வளாகத்தில் கொரோனா பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் நேற்று நடந்தது. பல்கலைக்கழக நெல்லை மண்டல டீன் சுரேஷ்குமார் தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசுகையில், “சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்குதல், அந்த நாடு மட்டும் இல்லாமல், பல வெளிநாடுகளிலும் பரவி வருகிறது. இந்த வைரஸ் தாக்குதலால் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனை கட்டுப்படுத்த சீனாவும், உலக சுகாதார நிறுவனமும் இணைந்து போராடி வருகின்றன. இந்த வைரஸ் தாக்காமல் இருக்க என்ன வழிமுறைகள் இருக்கிறது என்பதை பின்பற்ற வேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். வந்த பிறகு சிகிச்சை மேற்கொள்வதை விட, வரும் முன் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்றார்.

ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும் 

தொடர்ந்து இளம் விஞ்ஞானி விருது பெற்றவரும், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பயோ டெக்னாலஜி பேராசிரியருமான சுதாகர், கொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து விரிவாக பேசினார்.

அப்போது அவர் பேசுகையில் “உலகை அச்சுறுத்தி கொண்டு இருக்கும் கொரோனா வைரஸ் குறித்து பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனாலும் இந்த வைரசுக்கு முழுமையான தீர்வு கிடைக்கவில்லை. இதை கட்டுப்படுத்தும் போது, அது புதுவகையான வைரசாக உருவெடுக்கிறது. மனித குலத்தை காப்பாற்ற வேண்டும் என்றால், ஆராய்ச்சிகளை தீவிரப்படுத்த வேண்டும். இதுகுறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்“ என்றார்.

கருத்தரங்கில் தேசிய மாணவர் படையை சேர்ந்த மாணவ–மாணவிகள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் ஜெயந்தி, திட்ட அலுவலர் உஷா மற்றும் கருப்பசாமி ஆகியோர் செய்து இருந்தனர்.

Next Story