எல்கர் பரிஷத் வழக்கு: மராட்டிய அரசு மீது சரத்பவார் அதிருப்தி


எல்கர் பரிஷத் வழக்கு:   மராட்டிய அரசு மீது சரத்பவார் அதிருப்தி
x
தினத்தந்தி 14 Feb 2020 11:12 PM GMT (Updated: 14 Feb 2020 11:12 PM GMT)

எல்கர் பரிஷத் வழக்கை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றியதற்கு ஆதரவு தெரிவித்தது தொடர்பாக உத்தவ் தாக்கரே தலைமையிலான மாநில அரசு மீது சரத்பவார் அதிருப்தி தெரிவித்து உள்ளார்.

மும்பை, 

பீமா- கோரேகாவ் சாதிய வன்முறைக்கு காரணமாக கூறப்படும் எல்கர் பரிஷத் மாநாட்டில் பேசியவர்கள் மீதான வழக்கை தேசிய புலனாய்வு முகமைக்கு(என்.ஐ.ஏ.) மத்திய அரசு மாற்றிக்கொண்டது. முதலில் இதற்கு சிவசேனா தலைமையிலான கூட்டணி கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இந்தநிலையில், திடீரென தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்ட மாநில அரசு அந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றியதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என தெரிவித்தது. இது தொடர்பாக புனே செசன்ஸ் கோர்ட்டிலும் அரசு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

சரத்பவார் அதிருப்தி

இந்தநிலையில், மாநில அரசின் இந்த முடிவுக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் அதிருப்தி தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக கோலாப்பூரில் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மாநில சட்டம்- ஒழுங்கு விவகாரத்தில் மத்திய அரசு தலையிடக்கூடாது. எல்கர் பரிஷத் வழக்கு தொடர்பான விசாரணையை தேசிய புலனாய்வு முகமைக்கு மத்திய அரசு மாற்றிக்கொண்டது ஏற்புடையது அல்ல. அதே நேரத்தில் வழக்கை மாற்றுவதற்கு மாநில அரசு ஆதரவளிப்பது இன்னும் தவறானது.

இவ்வாறு அவர் கூறினார்.

மராட்டியத்தில் மகா விகாஸ் கூட்டணி அரசில் தேசியவாத காங்கிரஸ் அங்கம் வகிக்கும் நிலையில், உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசின் முடிவை சரத்பவார் விமர்சித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story