சபாநாயகருடன் தனவேலு எம்.எல்.ஏ. சந்திப்பு நோட்டீசுக்கு விளக்கமளிக்க அவகாசம் கேட்டு மனு


சபாநாயகருடன் தனவேலு எம்.எல்.ஏ. சந்திப்பு நோட்டீசுக்கு விளக்கமளிக்க அவகாசம் கேட்டு மனு
x
தினத்தந்தி 15 Feb 2020 5:52 AM IST (Updated: 15 Feb 2020 5:52 AM IST)
t-max-icont-min-icon

சபாநாயகர் சிவக்கொழுந்துவை தனவேலு எம்.எல்.ஏ. சந்தித்து பேசினார். அப்போது தன் மீதான நோட்டீசுக்கு விளக்கமளிக்க அவகாசம் கேட்டு மனு கொடுத்தார்.

புதுச்சேரி,

புதுவை பாகூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனவர் தனவேலு. ஆளுங்கட்சியில் இருந்து கொண்டே முதல் அமைச்சர், அமைச்சர்கள் மீது சரமாரியாக முறைகேடு புகார் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். ஊழல் விவரங்களை பட்டியலிட்டு கவர்னர் கிரண்பெடியை சந்தித்தும் புகார் மனு அளித்தார்.

இதையடுத்து அதிரடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு காங்கிரஸ் கட்சியிலிருந்து தனவேலு இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்தநிலையில் அவரை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் (எம்.எல்.ஏ. பதவியை பறிக்க) என்று சபாநாயகர் சிவக்கொழுந்துவிடம் அரசு கொறடா அனந்தராமன் எம்.எல்.ஏ. கடிதம் கொடுத்தார்.

இதுகுறித்து 7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு தனவேலு எம்.எல்.ஏ.வுக்கு சபாநாயகர் சிவக்கொழுந்து கடந்த 7-ந்தேதி நோட்டீசு அனுப்பினார்.

இந்த நோட்டீசுக்கு பதில் அனுப்புவது தொடர்பாக பிரபல வக்கீல்களுடன் தனவேலு எம்.எல்.ஏ. ஆலோசனை நடத்தினார். இந்தநிலையில் நேற்று பகல் 11 மணி அளவில் வக்கீல்கள் சிலருடன் சட்டசபைக்கு வந்தார். சபாநாயகரின் வருகைக்காக அவர் அங்கு காத்திருந்தார்.

பிற்பகல் 1 மணிக்கு சபாநாயகர் சிவக்கொழுந்து சட்டசபையில் உள்ள தனது அலுவலகத்துக்கு வந்தார். அவரை தனவேலு எம்.எல்.ஏ. தனது வக்கீல்களுடன் சென்று சந்தித்து பேசினார். அப்போது தகுதிநீக்க நோட்டீசுக்கு விளக்கம் அளிக்க 2 வாரம் கால அவகாசம் கேட்டு கடிதம் கொடுத்தார்.

கடிதத்தை பெற்றுக்கொண்ட சபாநாயகர் சிவக்கொழுந்து இதுதொடர்பாக ஆலோசித்து பதில் அளிப்பதாக தெரிவித்தார்.


Next Story