வேலூர் அருகே மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்
வேலூர் அருகே உடல் நலக்குறைவால் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானமாக அளிக்கப்பட்டது. சிறப்பு ஆம்புலன்ஸ் மூலம் இதயம் சென்னைக்கு அனுப்பப்பட்டது.
வேலூர்,
வேலூரை அடுத்த ஊசூர் கோட்டைமேடு தெருவை சேர்ந்தவர் பாபு, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருடைய மனைவி ஜமுனா (வயது 53). இவர்களுக்கு சுவப்னா என்ற மகளும், தினேஷ், ஹரிப்பாண்டியன் என்று 2 மகன்களும் உள்ளனர். சுவப்னாவிற்கு திருமணமாகி விட்டது. தினேஷ் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரிந்து வருகிறார். ஹரிப்பாண்டியன் ஏரோநாட்டிக்கல் என்ஜினீயரிங் முடித்துள்ளார்.
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ஜமுனா கடந்த 12-ந் தேதி வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஜமுனா மூளைச்சாவு அடைந்தார்.
இதனை உறுதி செய்த டாக்டர்கள் இந்த தகவலை அவரது குடும்பத்தினரிடம் தெரிவித்தனர். அதைக்கேட்டு மகள் மற்றும் மகன்கள் கதறி அழுதனர். சிறிது நேரத்துக்கு பின்னர் அவர்கள் தாயாரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர். அதனை அவர்கள் டாக்டர்களிடம் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து நவீன தொழில்நுட்பம் மூலம் ஜமுனாவின் இதயம், சிறுநீரகங்கள், கல்லீரல், நுரையீரல் ஆகிய உறுப்புகள் எடுக்கப்பட்டன.
அதில், இதயம், ஒரு சிறுநீரகம் சென்னையில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம், கல்லீரல் ஆகியவை சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கும், நுரையீரல் சென்னை குளோபல் மருத்துவமனைக்கும் தானமாக அளிக்கப்பட்டன. சிறப்பு ஆம்புலன்ஸ் மூலம் இதயம் உள்ளிட்ட உடல் உறுப்புகள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
Related Tags :
Next Story