பெங்களூருவில் முதல்-மந்திரி வீடு முற்றுகை போராட்டம் சித்தராமையா-காங். தலைவர்கள் கைது போலீஸ் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு


பெங்களூருவில் முதல்-மந்திரி வீடு முற்றுகை போராட்டம் சித்தராமையா-காங். தலைவர்கள் கைது போலீஸ் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 15 Feb 2020 11:30 PM GMT (Updated: 15 Feb 2020 7:59 PM GMT)

முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையிலான பா.ஜனதா அரசு போலீஸ் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதாக குற்றம் சாட்டி காங்கிரஸ் சார்பில் பெங்களூருவில் நேற்று போராட்டம் நடைபெற்றது. அப்போது முதல்-மந்திரி வீட்டை முற்றுகையிட சென்ற எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா உள்பட காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

பெங்களூரு,

பீதர் (மாவட்டம்) டவுனில் உள்ள சாகீன் என்ற தனியார் பள்ளியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகவும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் நாடகம் நடத்தப்பட்டது.

இதுதொடர்பாக அந்த தனியார் பள்ளி மீதும், நாடகத்தில் நடித்த ஒரு மாணவியின் தாய் மீதும் பீதர் போலீசார் தேசதுரோக வழக்குப்பதிவு செய்தனர். அந்த மாணவியின் தாய், பள்ளியின் முதல்வர் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதனை கண்டித்தும், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்த போலீசார் அனுமதி அளிப்பதில்லை மற்றும் போலீஸ் துறையை கர்நாடக அரசு தவறாக பயன்படுத்துகிறது என்பதை கண்டித்தும் பெங்களூரு அனந்தராவ் சர்க்கிளில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின் போது கர்நாடக அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் கோஷங்களை எழுப்பினார்கள். மேலும் போலீஸ் துறையை கர்நாடக அரசு தவறாக பயன்படுத்துவதாக காங்கிரஸ் தலைவர்கள் குற்றச்சாட்டு கூறினார்கள்.

பின்னர் அனந்தராவ் சர்க்கிளில் இருந்து குமர கிருபா ரோட்டில் உள்ள முதல்-மந்திரி எடியூரப்பாவின் வீட்டை முற்றுகையிடுவதற்காக சித்தராமையா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் புறப்பட்டு சென்றனர். ஆனால் முதல்-மந்திரியின் வீட்டை முற்றுகையிடுவதற்கு காங்கிரஸ் தலைவர்களுக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து, ரேஸ்கோர்ஸ் சாலையில் வைத்து சித்தராமையா உள்ளிட்ட தலைவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். ஆனால் போலீசாரின் பாதுகாப்பையும் மீறி முதல்-மந்திரியின் வீட்டை முற்றுகையிடுவதற்காக காங்கிரஸ் தலைவர்கள் செல்ல முயன்றனர்.

இதையடுத்து, மாநில தலைவர் தினேஷ் குண்டுராவ், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, டி.கே.சுரேஷ் எம்.பி. முன்னாள் எம்.பி. உக்ரப்பா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களை அங்கிருந்து பஸ்களில் ஏற்றி போலீசார் அழைத்து சென்றனர். பின்னர் மாலையில் சித்தராமையா உள்ளிட்ட தலைவர்கள் விடுவிக்கப்பட்டனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

முன்னதாக போராட்டத்தில் மாநில தலைவர் தினேஷ் குண்டுராவ் பேசியதாவது:-

பீதரில் குடியுரிமை திருத்த சட்டம், பிரதமருக்கு எதிராக தனியார் பள்ளி நாடகம் நடத்தியதாக கூறி, அந்த பள்ளி மீதும் மாணவியின் தாய் மீதும் போலீசார் தேசதுரோக வழக்குப்பதிவு செய்துள்ளனர். அந்த மாணவியின் தாய், பள்ளியின் முதல்வர் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். ஆனாலும் பள்ளி மீது தேசதுரோக வழக்குப்பதிவு செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.

கர்நாடக அரசு போலீஸ் துறையை தவறாக பயன்படுத்துகிறது. எம்.எல்.ஏ. ஹாரீசின் மகன் கார் விபத்தில் சிக்கியது பெரிதுபடுத்தப்பட்டது. ஆனால் மந்திரி அசோக்கின் மகன் கார் விபத்தில் சிக்கி 2 பேர் பலியாகி இருந்தாலும் கூட, மந்திரியின் மகன் மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை.

முன்னாள் மத்திய மந்திரி அனந்தகுமார் ஹெக்டே, ரேணுகாச்சார்யா, மந்திரி சி.டி.ரவி தங்களது வாய்க்கு வந்ததை பேசுகின்றனர். மக்களிடையே பிளவை ஏற்படுத்தும் விதமாக பேசி வருகின்றனர். அவர்கள் மீது தேசதுரோக வழக்குப்பதிவு செய்யப்படுவதில்லை. ஒரு தனியார் பள்ளி மீது தேசதுரோக வழக்குப்பதிவு செய்யப்படுவது எந்த விதத்தில் நியாயம். கர்நாடக அரசின் நடவடிக்கைகளை மக்கள் கவனித்து வருகின்றனர். பா.ஜனதா அரசுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

Next Story