ஜிப்மர் சார்பாக புற்றுநோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்


ஜிப்மர் சார்பாக புற்றுநோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்
x
தினத்தந்தி 16 Feb 2020 5:27 AM IST (Updated: 16 Feb 2020 5:27 AM IST)
t-max-icont-min-icon

ஜிப்மர் மண்டல புற்றுநோய் மையத்தின் சார்பாக கடற்கரையில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

புதுச்சேரி,

ஜிப்மர் மண்டல புற்றுநோய் மையத்தின் சார்பாக சர்வதேச குழந்தை பருவ புற்றுநோய் தினத்தை முன்னிட்டு பல்வேறு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் புற்றுநோயை தடுப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.கடந்த மாதம் (ஜனவரி) தொடங்கிய இந்த நிகழ்ச்சிகள் இந்த மாத இறுதிவரை நடக்கிறது.

இதுவரை 17 அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகளை சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு குழந்தை பருவ புற்றுநோய் தலைப்புகளில் கட்டுரை மற்றும் ஓவியப்போட்டிகள் நடத்தப்பட்டது.

இதன் ஒருபகுதியாக புதுவை கடற்கரை சாலையில் புற்றுநோய் விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது. ஊர்வலம் கடற்கரை கார்கில் போர் நினைவு சின்னத்தில் இருந்து தொடங்கியது. இதில் ஜிப்மர் புற்றுநோய் மைய அதிகாரிகள், தன்னார்வலர்கள், குழந்தைகள் பலர் கலந்துகொண்டு விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தியபடி வந்தனர். காந்தி சிலை பகுதியில் ஊர்வலம் நிறைவுபெற்றது.

அதைத்தொடர்ந்து கடற்கரை காந்தி திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜிப்மர் மருத்துவ கண்காணிப்பாளர் அசோக் சங்கர் கலந்துகொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். அதையடுத்து மாணவ-மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடந்தது. இதனை கடற்கரைக்கு வந்திருந்த ஏராளமானோர் கண்டுகளித்தனர்.

முன்னதாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னார்வலர்களிடம் இருந்து முடிதானம் பெறப்பட்டது. இதில் ஏராளமான பெண்கள் தாமாக முன்வந்து தங்களின் முடிகளை தானமாக வழங்கினார்கள்.

இதன் ஒருபகுதியாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) கோரிமேடு ஜிப்மரில் இருந்து புதுச்சேரி கடற்கரை வரை புற்றுநோய் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மாரத்தான் நிகழ்ச்சி நடக்கிறது.

Next Story