தூத்துக்குடி அருகே குட்டையில் மூழ்கி 9–ம் வகுப்பு மாணவன் சாவு பிறந்த நாளில் உயிரிழந்த சோகம்


தூத்துக்குடி அருகே குட்டையில் மூழ்கி 9–ம் வகுப்பு மாணவன் சாவு பிறந்த நாளில் உயிரிழந்த சோகம்
x
தினத்தந்தி 17 Feb 2020 3:00 AM IST (Updated: 16 Feb 2020 8:43 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி அருகே பிறந்த நாளில் குட்டையில் மூழ்கி 9–ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக இறந்தார்.

ஸ்பிக்நகர், 

தூத்துக்குடி அருகே பிறந்த நாளில் குட்டையில் மூழ்கி 9–ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக இறந்தார்.

9–ம் வகுப்பு மாணவன் 

தூத்துக்குடி அருகே அத்திமரப்பட்டியில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் பாய்மான வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்காலில் சில ஆண்டுகளுக்கு முன்பு தண்ணீரை தேக்கி வைக்கும் வகையில் சுமார் 40 அடி நீளத்துக்கு, 15 அடி ஆழத்தில் சிறிய குட்டை அமைக்கப்பட்டது. இந்த குட்டைக்கு கோரம்பள்ளம் குளத்தில் இருந்து தண்ணீர் வருகிறது. இதில் ஏராளமான மக்கள் குளிப்பது வழக்கம்.

அதன்படி நேற்று அந்த குட்டையில் ஸ்பிக்நகர் ஆதிபராசக்திநகரை சேர்ந்த 9–ம் வகுப்பு படித்து வரும் ஹட்சன் பிளசிங்டன் சாமுவேல் (வயது 15) என்பவர் தனது அண்ணன், தம்பியுடன் குளித்துக் கொண்டு இருந்தார்.

சாவு 

அப்போது எதிர்பாராத விதமாக பிளசிங்டன் சாமுவேல் தண்ணீருக்குள் மூழ்கினார். இதனால் அவரை குளித்துக் கொண்டு இருந்தவர்கள் மீட்க முயன்றனர். ஆனால் அவரை மீட்க முடியவில்லை.

இதுகுறித்து தகவல் அறிந்த முத்தையாபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். தூத்துக்குடி தீயணைப்பு நிலைய அதிகாரி கோமதி அமுதா தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து குட்டையில் மூழ்கிய பிளசிங்டன் சாமுவேலை தேடிப்பிடித்து மீட்டனர். தொடர்ந்து முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இறந்த பிளசிங்டன் சாமுவேலுக்கு நேற்று பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போன்று மாணவனின் தந்தை கடந்த வாரம் இறந்து விட்டார். தாய் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்த தொடர் சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story