சேலத்தில் ஆட்டு தோல் விற்பனை: தொழில் அதிபரிடம் ரூ.1½ கோடி மோசடி - வடமாநிலத்தை சேர்ந்தவர் மீது வழக்கு


சேலத்தில் ஆட்டு தோல் விற்பனை: தொழில் அதிபரிடம் ரூ.1½ கோடி மோசடி - வடமாநிலத்தை சேர்ந்தவர் மீது வழக்கு
x
தினத்தந்தி 16 Feb 2020 10:45 PM GMT (Updated: 16 Feb 2020 5:37 PM GMT)

சேலத்தில் ஆட்டு தோல் விற்பனை மூலம் தொழில் அதிபரிடம் ரூ.1½ கோடி மோசடி செய்த வடமாநிலத்தை சேர்ந்தவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சேலம், 

சேலம் ஜாகீர்ரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் அப்ராஸ் அகமத் (வயது 55). தொழில் அதிபர். இவர் ஆட்டு தோல் வாங்கி பதப்படுத்தி விற்கும் தொழில் செய்து வருகிறார். டெல்லி ஆக்ராவில் ‌ஷூ தயாரித்து விற்பனை செய்பவர் அசார் உசேன். இவர் கடந்த 2015-16-ம் ஆண்டு அப்ராஸ் அகமத்திடம் தனது நிறுவனத்துக்கு லட்சக்கணக்கில் ஆட்டு தோல் வாங்கி வந்தார்.

கடந்த 2018-ம் ஆண்டு திடீரென அசார் உசேன், அப்ராஸ் அகமத்திற்கு போன் செய்து தனக்கு பிரபல செருப்பு நிறுவனத்தில் இருந்து ரூ.9 கோடிக்கு ஆர்டர் கிடைத்துள்ளது. இதனால் எனக்கு ரூ.2 கோடிக்கு நீங்கள் ஆட்டு தோலை வழங்க வேண்டும். அதற்கான தொகையை தவணை முறையில் தருகிறேன் என கூறியுள்ளார். இதை நம்பிய அப்ராஸ் அகமத் ரூ.1 கோடியே 81 லட்சத்துக்கு ஆட்டு தோல்களை பதப்படுத்தி அசார் உசேனுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இதைத்தொடர்ந்து அசார் உசேன், அப்ராஸ் அகமத்திற்கு ரூ.27 லட்சத்தை மட்டும் வழங்கியதாக கூறப்படுகிறது.. இதையடுத்து அவர் மீதி பணத்தை வழங்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதனால் அப்ராஸ் அகமத் டெல்லிக்கு சென்று அசார் உசேனை சந்தித்து பணம் கேட்டார். அப்போது அவர் விரைவில் பணம் தருவதாக கூறி அப்ராஸ் அகமதை அங்கிருந்து அனுப்பி வைத்தார். ஆனால் அவர் பணம் கொடுக்கவில்லை.

இதையடுத்து மீண்டும் அப்ராஸ் அகமத், அசார் உசேனிடம் பணம் கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த அசார் உசேன் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் சேலம் மாநகர போலீஸ் கமி‌‌ஷனர் செந்தில்குமாரிடம் புகார் மனு கொடுத்தார். இதுதொடர்பாக விசாரணை நடத்தும்படி மத்திய குற்றப்பரிவு போலீசாருக்கு கமி‌‌ஷனர் உத்தரவிட்டார்.

அதன் பேரில் வடமாநிலத்தை சேர்ந்த அசார் உசேன் மீது ரூ.1 கோடியே 54 லட்சம் பண மோசடி, கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story