கலசபாக்கம் அருகே: கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழந்த பரிதாபம்


கலசபாக்கம் அருகே: கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழந்த பரிதாபம்
x
தினத்தந்தி 17 Feb 2020 4:00 AM IST (Updated: 17 Feb 2020 3:24 AM IST)
t-max-icont-min-icon

கலசபாக்கம் அருகே கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழந்தார். சாவிலும் அந்த தம்பதி ஒன்றாக இணைந்தது உறவினர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

கலசபாக்கம்,

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தாலுகா பட்டியந்தல் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 96), விவசாயி. இவருடைய மனைவி வீரகங்கா (87). இவர்களது மகன் காளி. இவர், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். காளியின் மனைவி தேவியும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். காளி தம்பதியருக்கு மகே‌‌ஸ்வரி என்ற மகள் உள்ளார். பேத்தியை ஜெயராமன் தம்பதியினர் வளர்த்து வந்தனர்.

ஜெயராமனும், வீரகங்காவும் விவசாய நிலத்தில் வேலை செய்து யாருடைய துணையும், எந்தவித எதிர்பார்ப்புமின்றியும் வாழ்க்கையை நடத்தினர். இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி அளவில் வயோதிகம் காரணமாக ஜெயராமன் திடீரென இறந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வீரகங்கா, பேத்தி மகேஸ்வரி மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

பின்னர் வீரகங்கா கணவரின் உடலை கட்டி அணைத்து அழுது கொண்டிருந்தார். தொடர்ந்து அழுது கொண்டிருந்த வீரகங்கா நேற்று அதிகாலை 2 மணி அளவில் திடீரென மயங்கினார். இதனையடுத்து உறவினர்கள், அவரை எழுப்ப முயன்ற போது அவரும் இறந்தது தெரியவந்தது. இதனையடுத்து இருவரது உடல்களும் ஒன்றாக அடக்கம் செய்யப்பட்டது.

60 ஆண்டுகளுக்கும் மேலாக இணை பிரியாமல் வாழ்ந்த இருவரும், சாவிலும் ஒன்றாக இணைந்த சம்பவம் பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் சோகத்தையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

Next Story