கர்நாடக சட்டசபையின் கூட்டு கூட்டம் இன்று தொடங்குகிறது: கவர்னர் வஜூபாய்வாலா உரையாற்றுகிறார் பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்


கர்நாடக சட்டசபையின் கூட்டு கூட்டம் இன்று தொடங்குகிறது: கவர்னர் வஜூபாய்வாலா உரையாற்றுகிறார் பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்
x
தினத்தந்தி 17 Feb 2020 4:44 AM IST (Updated: 17 Feb 2020 4:44 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக சட்டசபையின் கூட்டு கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. இந்த கூட்டத்தில் கவர்னர் வஜூபாய் வாலா உரையாற்றுகிறார். மழை, வெள்ள நிவாரணம் வழங்காமல் இருப்பது உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

பெங்களூரு,

கர்நாடக சட்டசபை கூட்டத்தொடர் பெங்களூரு விதானசவுதாவில் இன்று(திங்கட் கிழமை) காலை 11 மணியளவில் கூடுகிறது.

இந்த கூட்டத்தொடர் வருகிற 20-ந் தேதி வரை மொத்தம் 4 நாட்கள் நடைபெற உள்ளது. அதன்பிறகு, அடுத்த மாதம் (மார்ச்) 5-ந் தேதி முதல்-மந்திரி எடியூரப்பா பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார். இதற்காக அடுத்த மாதம் 2-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை சட்டசபை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இது என்பதால், சபையின் கூட்டு கூட்டத்தில் (சட்டசபை மற்றும் மேல்-சபை) கவர்னர் வஜூபாய் வாலா உரையாற்ற இருக்கிறார்.

அரசு செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து கவர்னர் உரையில் இடம் பெற உள்ளது. கவர்னர் உரை முடிந்ததும் அரசியல் தலைவர்கள், முக்கிய பிரபலங்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு, சபை ஒத்திவைக்கப்படும் என்று சபாநாயகர் விஸ்வேசுவர ஹெக்டே காகேரி தெரிவித்துள்ளார். பின்னர் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் 20-ந் தேதி வரை கவர்னர் உரையின் மீது விவாதம் நடைபெற உள்ளது.

கர்நாடக சட்டசபை கூட்டத்தொடர் இன்று கூடுவதையொட்டி, அதற்கு ஆயத்தமாகும் விதமாக நேற்று முதல்-மந்திரி எடியூரப்பா பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களுடன் பெங்களூருவில் ஆலோசனை நடத்தினார். அதுபோல, எதிர்க்கட்சி தலைவரான சித்தராமையாவும் நேற்று மாலையில் பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தினார். இதற்கிடையில், சட்டசபை கூட்டத்தொடரில் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி முதல்-மந்திரி எடியூரப்பா மற்றும் பா.ஜனதா அரசுக்கு நெருக்கடி கொடுக்க காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

அதாவது கடந்த ஆண்டு (2019) வடகர்நாடக மாவட்டங்கள் மழை, வெள்ளத்தால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கானோர் தங்களது வீடுகளை இழந்துள்ளனர். ஆனால் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு சார்பில் போதிய நிவாரணம் வழங்கப்படாமல் உள்ளது. வீடுகளை இழந்தவர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்படவில்லை. இதனால் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு நிவாரண உதவிகளை வழங்குவதில் தோல்வி அடைந்து விட்டதாக கூறியும், மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கவில்லை என்று கூறி பிரச்சினையை எழுப்பவும் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

அதே நேரத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடுவதற்கு அனுமதி அளிக்க போலீசார் மறுப்பது, குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து மங்களூருவில் நடந்த வன்முறை மற்றும் போலீஸ் துப்பாக்கி சூடு சம்பவத்தை எழுப்பி அரசுக்கு நெருக்கடி கொடுக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. மேலும் பிரதமருக்கு எதிராக நாடகம் நடத்தியதாக பீதரில் தனியார் பள்ளி மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள விவகாரம் குறித்தும் சட்டசபையில் பிரச்சினை எழுப்புவேன் என்று எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தெரிவித்துள்ளார். குறிப்பாக சுரங்க முறைகேட்டில் ஈடுபட்டு 15 வழக்குகள் உள்ள மந்திரி ஆனந்த்சிங்கிற்கு வனத்துறை ஒதுக்கப்பட்டு இருப்பதை கண்டித்தும், அவரிடம் இருந்து வனத்துறையை பறிக்க வலியுறுத்தியும் காங்கிரஸ் கட்சியினர் சபையில் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

எல்லாவற்றுக்கும் மேலாக மத்திய அரசு, கர்நாடகத்திற்கு கொடுக்க வேண்டிய நிதியில் ரூ.5,490 கோடியை குறைத்திருக்கிறது. இந்த பிரச்சினையை எழுப்பவும் எதிர்க்கட்சி தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர். மேலும் மகாத்மா காந்தி குறித்து முன்னாள் மத்திய மந்திரி அனந்தகுமார் ஹெக்டே பேசியது, முந்தைய காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை செயல்படுத்தாமல் கிடப்பில் போட்டு இருப்பது, சில திட்டங்களுக்கு நிதி ஒதுக்காமல் இருப்பது உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்பவும் எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.

இதையடுத்து, எதிர்க்கட்சிகள் எழுப்பும் பிரச்சினைகளுக்கு தக்க பதிலடி கொடுக்க முதல்-மந்திரி எடியூரப்பாவும் தயாராகி வருகிறார். அதே நேரத்தில் சட்டசபையை சுமுகமாக நடத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சபாநாயகர் விஸ்வேசுவர ஹெக்டே காகேரி தெரிவித்துள்ளார்.

அத்துடன் கவர்னர் உரைக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக போராட்டத்தில் ஈடுபட்டாலோ, கூச்சலிட்டாலோ, அந்த எம்.எல்.ஏ.க்கள் இடைநீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் சபாநாயகர் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த கூட்டத்தொடரில் லோக் ஆயுக்தாவில் சட்ட திருத்தம் உள்பட 6 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன.

கர்நாடக சட்டசபை இன்று கூடுவதுடன், கவர்னர் வஜூபாய் வாலா உரையாற்ற இருப்பதால், அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் அமருவதற்கான இருக்கைகள் ஒதுக்குவது உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. நாடாளுமன்றத்தை போன்று கர்நாடக சட்டசபை கூட்டத்தொடரின் போதும் தனியார் தொலைக்காட்சி ஊடகங்களுக்கு சபாநாயகர் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். அதன்படி, வீடியோ கேமராக்களை தனியார் தொலைக்காட்சி ஊடகங்கள் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக சட்டசபை கூடுவதையொட்டி இன்று முதல் வருகிற 20-ந் தேதி வரை விதானசவுதாவை சுற்றி 2 கிேலா மீட்டர் தூரத்துக்கு 144 தடை உத்தரவை போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ் பிறப்பித்துள்ளார்.

Next Story