“அரசியல் சாசனத்தை பாதுகாக்க ஒன்றுபட்டு போராடுவோம்” சீதாராம் யெச்சூரி பேச்சு


“அரசியல் சாசனத்தை பாதுகாக்க ஒன்றுபட்டு போராடுவோம்” சீதாராம் யெச்சூரி பேச்சு
x
தினத்தந்தி 17 Feb 2020 4:00 AM IST (Updated: 17 Feb 2020 5:56 AM IST)
t-max-icont-min-icon

அரசியல் சாசனத்தை பாதுகாக்க ஒன்றுபட்டு போராடுவோம் என மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் சீதாராம் யெச்சூரி கூறினார்.

மதுரை, 

மதுரை பழங்காநத்தம் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அரசியல் விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. விஜயராஜன் தலைமை தாங்கினார். எஸ்.கே.பொன்னுத்தாய் வரவேற்றார். ராமகிருஷ்ணன், நன்மாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது-

நம் குடியரசு மதசார்பின்மையை மையமாக கொண்டது. அது பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக இந்த கூட்டம் நடக்கிறது. மோடி 2-வது முறையாக ஆட்சிக்கு வந்ததில் இருந்து கடும் நெருக்கடியை நாம் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். பொருளாதார நெருக்கடி, இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து மக்களின் மீதான வாழ்வுரிமை நெருக்கடி. இவர்கள் மீதான நெருக்கடி சமூக நல்லிணக்கத்துக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி. அதுமட்டுமல்லாமல் வெறுப்பு அரசியலையும் பார்க்கிறோம். மோடியும், இவர்களது ஆட்சியில் இந்தியா முழுவதும் வன்முறை, வெறுப்பு அரசியலை பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

தற்போது அரசியல் சாசனம் கடும் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது. ஒவ்வொரு மதத்தினருக்கும் ஒரு புனித நூல் இருக்கும். ஆனால் இந்தியர்களாகிய நமக்கு அரசியல் சாசனம் தான் புனித நூல். அந்த புனித நூலை சீரழிக்க நாம் விடக்கூடாது. அதை பாதுகாக்க ஒன்றுபட்டு போராடுவோம். பொதுவாக குடியுரிமை திருத்த சட்டத்தினால் இஸ்லாமியர்கள் தான் பாதிக்கப்படுவதாக நினைத்து போராடுகிறார்கள் என்கிறார்கள். குடியுரிமை திருத்தச்சட்டத்தை நாம் ஆட்சேபிக்கிறோம். ஏனென்றால் இந்த சட்டத்தினால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுவார்கள். குடியுரிமை என்பது அனைவருக்கும் பொதுவானது. இது அரசியல் அடிப்படை சட்டத்தின் மீது ஏன் கைவைக்கிறீர்கள். எனவே தான் இந்த சட்டத்திருத்தத்துக்கு எதிராக குரல் கொடுக்கிறோம்.

வருகிற ஏப்ரல் முதல் தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்காக கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த இருக்கிறார்கள். அவர்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து வீட்டில் இருப்பவர்கள் குறித்து விவரம் கேட்டால் தெரிவிக்காமல் புறக்கணிப்போம்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் சு.வெங்கடேசன் எம்.பி., கனகராஜ், மதுக்கூர் ராமலிங்கம், பாலபாரதி மற்றும் தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் உள்பட நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.

Next Story